fbpx
Homeதலையங்கம்வரதட்சணையை ஆதரிக்கும் கேடுகெட்ட பாடப்புத்தகம்!

வரதட்சணையை ஆதரிக்கும் கேடுகெட்ட பாடப்புத்தகம்!

இந்தியாவில் நர்சிங் படிப்புக்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய நர்சிங் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட சமூகவியல் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்று ஒரு தனிப்பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்தப் பகுதி தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவரும் நிலையில், அனைத்து தரப்பினராலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் வரதட்சணையால் பல்லாயிரம் பெண்கள் வன்முறைகளையும், கொடுமைகளையும் சந்தித்து வருகின்றனர்.

வரதட்சணை கொடுமையிலிருந்து தப்பிக்க முடியாமல் வேதனையில் உழலும் பெண்கள் தொடங்கி, அதை எதிர்த்து துணிந்து நீதிமன்றத்தை நாடும் பெண்கள், அதை எதிர்க்க முடியாமல் தற்கொலை செய்து உயிரை மாய்க்கும் பெண்கள் என ஒவ்வொரு நாளும் இந்தியாவில் வரதட்சணை ஏற்படுத்தும் தாக்கம் மிகக்கொடுமையானது.

வரதட்சணையை ஒழிப்பதற்காகவே தனியே சட்டமியற்றி அரசும் நீதிமன்றங்களும் போராடிக் கொண்டிருக்கின்றன. மாதர் அமைப்புகள் களமிறங்கி போராடி வருகின்றன. வரதட்சணை வாங்கினாலும் குற்றம், கொடுத்தாலும் குற்றம் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படியான சூழலில்தான், கல்லூரி புத்தகமொன்றில் வரதட்சணையால் கிடைக்கும் நன்மைகள்’ என்ற தலைப்பின்கீழ் சில மோசமான முன்னுதாரணங்கள் பகிரப்பட்டுள்ளன.

அதுவும், இந்திய நர்சிங் கவுன்சிலால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு சமூகவியல் பாடப்புத்தகத்தில் இந்த தலைப்பின் கீழான பாடம் இடம்பெற்றுள்ளது. அந்தப் புத்தகத்தின் 6-வது பாடத்தில் கூறப்பட்டிருக்கும் வரதட்சணையின் 4 நன்மைகள் இதோ: புதிதாக குடும்ப அமைப்புக்குள் நுழைவோருக்கு வரதட்சணை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

ஏனெனில் ஒரு வீட்டின் அடிப்படை உபயோகப் பொருட்களான கட்டில், மெத்தை, டி.வி., ஃபேன், சின்ன சின்ன பாத்திரங்கள், ஆடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க வரதட்சணை மிகவும் உபயோகமாக இருக்கிறது.

அந்தவகையில் இந்தியாவின் ஒரு சில இடங்களில் வாகனங்கள்கூட வரதட்சணையாக பெறப்படுகிறது. இப்படியாக வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் ஒரு வீட்டை கட்டமைக்க உதவுகின்றன.

பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சொத்துதான் வரதட்சணை. ஒரு பெண், சொத்தில் தன் பங்கையே வரதட்சணையாக பெறுகிறாள். பெண்ணுக்கு உயர்படிப்பு கிடைக்க, வரதட்சணை உதவுகிறது.

ஏனெனில் வரதட்சணையால் ஏற்படும் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பல பெற்றோர் தங்கள் மகள்களை படிக்க வைக்கின்றனர், வேலைக்கும் அனுப்புகின்றனர். இப்படி செய்வதன் மூலம், வரதட்சணை சுமையை அவர்களால் குறைக்க முடிகிறது.

இப்படியாக வரதட்சணை மறைமுகமாக பெண்ணின் கல்விக்கு உதவியாக உள்ளது. பார்வைக்கு அழகில்லாத பெண் / ஆணையும்கூட, கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க முடியும். இப்படியான துவேஷ கருத்துக்கள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

இவற்றுடன், மணமகன் தரப்பிலிருந்து வரதட்சணை வாங்கப்படுவதற்கான காரணமும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படிமகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு, அந்த மகனை பெற்றோர் தங்களின் மகளுக்கு நல்லபடியாக திருமணம் செய்து கொடுக்க முடியும்.

தங்கள் மகளுக்கு எவ்வளவு வரதட்சணை கேட்கப்படுகிறது என்பதை பொறுத்துதான், மகனை திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் நிபந்தனைகள் வைக்கப்படுகிறது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

வரதட்சணைக்கு எதிராக தற்போதைய சமூகம் சிறிது முன்னேறிவரும் நிலையில் மீண்டும் இந்நூல் பழையபடி மக்களை இட்டுச் செல்ல வழிவகுக்கும் வகையில் உள்ளது.

இந்த நூலை உடனடியாக கல்லூரி பாடத்தில் இருந்து நீக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நூல் எப்படி பாடநூலாக உள் நுழைந்தது, இதனை தேர்வு செய்தது யார், அதற்கு அனுமதி அளித்தது யார்? அனைவரும் விசாரிக்கப்பட்டு அவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.

வரதட்சணையை புனிதப்படுத்தும் இந்த கேடுகெட்ட பாடநூலை உடனே திரும்பப் பெற வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img