fbpx
Homeதலையங்கம்சூப்பர் ஸ்டார் ரஜினி ஆளுநர் ஆகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆளுநர் ஆகிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி ஆளுநர் ஆகப்போகிறார் என்ற தகவல் தமிழகத்தில் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. சமீபத்தில் அவர் டெல்லி சென்று வந்த பிறகே பரபரப்பு அதிமாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் முயற்சிகளில் அக்கட்சி களமிறங்கி விட்டது. தேசிய பாஜகவும் தமிழகத்தில் வாக்குகளை அறுவடை செய்யும் வியூகத்தை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் முதல் சாய்ஸ் ரஜினிகாந்த் மட்டுமே.

கடந்த முறை மாதிரி இல்லாமல் இந்த முறை ரஜினியை பாஜக முழுமையாக பயன்படுத்தும் காரியம் நடந்து வருகிறது. அதற்காகவே அவருக்கு ஆளுநர் ஆசை காட்டப்பட்டுள்ளதாகவும் அதற்கு ரஜினி ஓகே சொல்லி விட்டதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றன.

ரஜினி தவிர்க்க முயன்றாலும் பாஜக விடுவதாக இல்லை. கட்சி ரீதியான கூட்டங்களில் பேச ரஜினி தயக்கம் தெரிவித்தாலும், கட்சி சாராத சில பொதுக்கூட்டங்களில் தேர்தல் சமயத்தில் பேச வைத்து சாதித்து விடலாம் என்பது பாஜகவின் கணக்கு.

அதனால் அவரை ஏதேனும் ஒரு மாநிலத்திற்கு ஆளுநராக நியமிப்பது என்று பாஜக யோசித்து வருகிறது. இரு வாரங்களுக்கு முன் இந்தியா டுடே பத்திரிகை வெளியிட்ட செய்தியில் ‘ரஜினி விரைவில் தமிழக ஆளுநராக நியமிக்கப்படுவார்’ என்று கூறப்பட்டு இருந்தது. இப்போது அவர் கர்நாடக மாநில ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் வெளியாகி இருக்கிறது.

எது எப்படியோ, தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஆளுநர் பதவி கிடைக்கட்டும். அப்படி கிடைத்தால் அரசியலை தாண்டி, அது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

ஆனால் அது நடக்குமா? என்பதில் தான் சந்தேகம் நீடிக்கிறது. ஏனென்றால், கடந்த கால வரலாறு அப்படி. கட்சி தொடங்கி, தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக அறிவித்து, அடுத்த நாளே தடாலடியாக அரசியலுக்கு முழுக்கு போட்டவர் தானே ரஜினி.

தற்போதைய சூழ்நிலையிலும் அவரை நினைத்தால் மண்குதிரை தான் நியாபகத்திற்கு வருகிறது. பாஜகவை நம்பி ரஜினி இருக்கிறாரா? ரஜினியை நம்பி பாஜக இருக்கிறதா-? என்பது புரியவில்லை.

இனியாவது ரஜினிகாந்த் தீர்க்கமான முடிவெடுக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img