fbpx
Homeதலையங்கம்பெரும் சவாலாக மாறிய பண்பாடு - கலாச்சாரம்!

பெரும் சவாலாக மாறிய பண்பாடு – கலாச்சாரம்!

அண்மைக் காலமாக பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிச் சீருடை அணிந்து கொண்டு மது குடிப்பது, ஒரு பையனுக்காக ஒன்றிரண்டு மாணவிகள் அடித்துக் கொள்வது, பள்ளிக்கூட வாசல்களில் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவது என நடப்பதைப் பார்க்கும்போது பெற்றோர் மனம் பதைபதைக்கிறது.

தன்னந்தனியே மாணவர்களும் மாணவிகளும் காட்டு பகுதி, ஆள் அரவமற்ற பகுதிகளுக்கு சென்று மது குடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதை காட்டிலும் மிகவும் மோசமான சம்பவங்களும் நடக்கின்றன.

காதல் என்ற பெயரில் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவிக்கு மாணவன் தாலி கட்டிய காட்சி இணையதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. இதனை இணையத்தில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து நமது பண்பாட்டுக்கும் கலாச்சாரத்துக்கும் பெரும் சவாலாக மாறி இருக்கிறது. இதையெல்லாம் டிவிகளிலும் சமூக வலைதளங்களிலும் பார்க்கும் பெற்றோர் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

பள்ளி வகுப்புகளை கூட மாணவிகள் கட் அடித்துவிட்டு சினிமா தியேட்டர்களுக்குச் செல்வதும் தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவ, மாணவிகள் தொடர்பான இதுபோன்ற வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றம்.

இதுபோன்ற சம்பவங்கள் பொது இடங்களில் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு வீடியோ எடுக்காமல் சமூக பொறுப்புணர்வை உணர்ந்து அந்த சம்பவங்களை தடுக்க வேண்டும். குறைந்தபட்சம் அருகில் உள்ள காவல் நிலையத்திலாவது புகார் கூறவேண்டும்.

பாலியல் தொடர்பான குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதற்காக போக்சோ போன்ற சட்டங்கள் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் சமூக கட்டுப்பாடுகள் பேணப்பட வேண்டும்.

மொபைல் போன்ற தொழில்நுட்பங்கள் நல்லவற்றுக்கு அதிகம் பயன்படுகிறது என்றாலும் இளம்வயதினர் எளிதில் தடம்மாறிச் செல்வதற்கும் வழிகாட்டி விடுகின்றன.

தங்கள் குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை அவர்கள் எது நல்லது எது கெட்டது? என்பதை பகுத்தறியும் தகுதியை பெறும்வரை பெற்றோர் கண்ணை இமை காப்பது போல காக்க வேண்டும்.

அவர்களுக்கு பெற்றோரும் ஆசிரியர்களும் தான் நல்வழியில் செல்லும் சூழலை உருவாக்கித் தரமுடியும்.

வருமுன் காப்பது தானே புத்திசாலித்தனம்!

படிக்க வேண்டும்

spot_img