fbpx
Homeபிற செய்திகள்வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கடற்படை!

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய கடற்படை!

இந்திய எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை நோக்கி இந்தியக் கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் மயிலாடுதுறை மீனவர் வீரவேல் படுகாயம் அடைந்திருக்கிறார்.

நல்வாய்ப்பாக அவரது உயிருக்கு ஆபத்து இல்லை. மற்ற மீனவர்களையும் இரும்பு கம்பியால் கடற்படையினர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எச்சரித்தும் நிற்காமல் சென்றதால் சுட்டதாக கடற்படை விளக்கம் அளித்திருப்பது ஏற்புடையதாக இல்லை. ஏற்கனவே இலங்கை கடற்படையின் அட்டூழியத் தால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் தமிழக மீனவர்களை இந்திய கடற்படையே சுட்டிருப்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக உள்ளது.

இலங்கை கடற்படை கப்பல் என பயந்து தான் மீனவர்கள் நிற்காமல் படகை ஓட்டிச் சென்றுள்ளனர். தமிழக மீனவர்களின் படகு என்று தெரிந்தும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? முதலில் வானில் சுட்டு எச்சரித்து இருக்கலாம்.

அப்படிச் செய்ததாக தகவல் இல்லை. சிறிய படகை மடக்கிப் பிடிக்க எத்தனையோ வழிகள் இருந்தும் கடற்படை இப்படி துப்பாக்கியை கையில் எடுத்திருக்கலாமா? எதிரி நாட்டு படகைப் பிடிப்பது போல துப்பாக்கி சூடு நடத்தியதை தவிர்த்திருக்கலாம்.

நமது நாட்டு பாதுகாப்பு படையினரை நாமே விமர்சிக்கும் துர்பாக்கிய நிலை உருவாவது ஏற்புடையதல்ல. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு அவசரமாக கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், இந்திய கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது அது இந்திய மீனவர்களுக்கு நம்பிக்கையின்மை¬யும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது.

இந்திய மீனவர்களை இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் கையாள்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அதற்கான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருப்பது மிகமிகச் சரியானது. இப்படியொரு சம்பவம் இனியொரு முறை நடந்து விடக்கூடாது.
தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பும் அது தான்!

படிக்க வேண்டும்

spot_img