fbpx
Homeதலையங்கம்ரிஷி சுனக் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!

ரிஷி சுனக் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்!

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்தின் 57-வது பிரதமராக நேற்று பதவியேற்றார். முதல் இந்து பிரதமர், வெள்ளையினத்தை சாராத முதல் பிரதமர், முதல் இந்திய வம்சாவளி பிரதமர் உள்ளிட்ட பல்வேறு பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் போர் காரணமாக இங்கிலாந்தும் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது.

இதில் இருந்து மீள கடுமையான கட்டுப்பாடுகள், நடைமுறைகள் அமல் செய்யப்படும் என்று அஞ்ச வேண்டாம். மக்களின் நலன், வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டே அரசின் செயல்பாடுகள் இருக்கும். நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு தீர்வு காண்பேன்.

நாட்டை ஒன்றிணைப்பேன். வெறும் வார்த்தைகளால் அல்ல. செயல்பாடுகளால் நாட்டை ஒன்றிணைப்பேன். இரவு, பகலாக உங்களுக்காக உழைப்பேன். கன்சர்வேட்டிவ் கட்சியினரின் நம்பிக்கையை பெற்றுள்ளேன். அடுத்து மக்களின் நம்பிக்கையையும் பெறுவேன்.

முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் சாதனைகளை இப்போது நினைவுகூர்கிறேன். அவரது சாதனைகள், பெருந்தன்மைக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன், என்று மிகுந்த அனுபவ சாலி போல தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார், இளம்வயது பிரதமர்.

ரிஷி சுனக் இந்திய வம்சாவளி என்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படக்கூடியதாகும். ஏற்கனவே இந்தியாவின் நட்பு நாடாக இருந்துவரும் இங்கிலாந்துடனான உறவு இனி மிக நெருக்கமாகும் என்று நமது பிரதமர் மோடி தெரிவித்து இருப்பது உண்மை தான். ரிஷி சுனக்குக்கு இந்தியா மீது தனிப்பட்ட பாசம் இல்லாமலா போகும்?.

ரிஷி சுனக் பிரதமராக ஆனதே ஒரு சாதனை தான். அவரது கூற்றுப்படி, இங்கிலாந்து வளமான எதிர்காலத்தை நோக்கிச் செல்லட்டும். அந்நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது போல புதிய சாதனைகளை ரிஷி சுனக் நிச்சயம் படைப்பார், இங்கிலாந்தின் பொருளாதாரம் மறுமலர்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.
புதிய பிரதமருக்கு வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img