fbpx
Homeபிற செய்திகள்இளைஞர்கள் தொழில் துவங்க பல கோடி ரூபாய் வரை கடனுதவி- மகளிர் திட்ட இயக்குநர் தகவல்

இளைஞர்கள் தொழில் துவங்க பல கோடி ரூபாய் வரை கடனுதவி- மகளிர் திட்ட இயக்குநர் தகவல்

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி ஒன்றியம், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக தீனதயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ், திமிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள இளைஞர்களுக்கான இளைஞர் திறன் திருவிழாவில், தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தேர்வானவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

மகளிர் திட்ட இயக்குநர் மு.நானில தாசன், திமிரி ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.அசோகன் ஆகியோர் ஆணைகளை வழங்கினர். மகளிர் திட்ட இயக்குநர் மு.நானில தாசன் பேசியதாவது:

இளைஞர்கள் தொழில் துவங்கிட வங்கிகள் மூலமாக அதிகளவிலான (கோடிகள் வரையில்) கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் இது போன்ற திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்தி தொழில் முனைவோர்களாகவும், தொழிலதிபர் களாகவும் மாறலாம். புதிய தொழில் துவங்க 35% மானியத்துடனும், குறைந்த வட்டி விகிதத்திலும் கடனுதவி அளிக்கப்படுகிறது.

எந்த தொழில் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அப்போதுதான் இலக்கை அடைய முடியும். DDUGKY திட்டத்தில் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ள திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

உங்களுக்கு எந்த மாதிரியான திறன் தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதனை வளர்த்துக் கொள்ளுங்கள். சிலர் நன்றாகப் படித்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகலாம். அனைவருக்கும் அரசு வேலை என்பது சாத்தியமில்லாதது.

ஆகவே தொழில் துவங்க திட்டமிடுபவர்கள் சரியான தொழிலை தேர்ந்தெடுத்து கடனுதவிகளை பெற்று முன்னேறலாம்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரின் தொடர் முயற்சியின் காரணமாக நமது மாவட்டத்தில் இது போன்ற வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா முகாம்கள் அனைத்து வட்டாரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இவற்றை பயன்படுத்தி கொண்டு அனைவரும் வாழ்வில் முன்னேறி வெற்றி பெற வேண்டும் என்றார். இளைஞர் திறன் திருவிழாவில் அரசுத் துறை நிறுவனங்கள் (R-SETI) மாவட்ட தொழில் மையம், வேலைவாய்ப்புத் துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், திறன்மேம்பாட்டு பயிற்சி நிறுவனம், DDUGKY பயிற்சி நிறுவனங்கள் மற்றும் 18 தனியார் துறை தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, வேலைவாய்ப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்தனர்.

நகர் மற்றும் கிராமப்பகுதியில் இருந்து ஆண்களும், பெண்களும் என மொத்தம் 314 பேர் பங்கேற்றனர். இதில் DDUGKY பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற 27 பேரும், தனியார் தொழில் நிறுவனங்களில் 102 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நியமன ஆணைகளைப் பெற்றனர்.

திமிரி ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் உற்பத்தியாளர் தொழில்குழுக்களுக்கான நிதி ரூ.38 லட்சம் 19 உற்பத்தியாளர் குழுக் களுக்கு வழங்கப்பட்டது.

திமிரி ஒன்றியக் குழு துணைத் தலைவர் கே.ரமேஷ், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர், உதவி திட்ட அலுவலர் சாகுல் அமீது, வட்டார இயக்க மேலாண்மை அலகின் மேலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img