fbpx
Homeதலையங்கம்ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை!

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை!

தமிழகத்தில் அரிசி கடத்தலைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) பணியாளர் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணியிலும் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அரிசி மற்றும் பிற பொது விநியோக பொருட்களைக் கடத்துவதில் அவ்வமைப்பின் ஊழியர்களே ஈடுபடுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரிசி கடத்தல்காரர்களுக்கு உதவும் ஊழியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு வருகின்றனர். சிவில் சப்ளை துறையின் பெரும்பாலான சிசிடிவி கேமராக்கள் கடந்த பல மாதங்களாக வேலை செய்யவில்லை என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் குடோன்களில் உள்ள 2869 சிசிடிவி கேமராக்களை சீரமைக்க துறை தற்போது டெண்டர் கோருகிறது.
தமிழகம் முழுவதும் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் எல்லையோர சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் தமிழக காவல்துறை முடிவு செய்துள்ளது.

கோவை, கன்னியாகுமரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தென்காசி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் சோதனைச் சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் அறிக்கையின்படி, மே 2021 முதல் அக்டோபர் 25, 2022 வரை அரிசி கடத்தலில் ஈடுபட்டதாக 12,721 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரிசி கடத்தியதாக மொத்தம் 2607 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 128 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அண்டை மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 90,122 குவிண்டால் அரிசி சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏழை எளியமக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருளான ரேஷன் அரிசி கடத்துபவர்களின் மீது கடும் சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தாலும் கடத்தலை முற்றிலும் ஒழிக்க முடியாத நிலையே தொடர்கிறது.

ஆகவே, நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து சோதனைச் சாவடிகளிலும்சிசிடிவி பொருத்தி நியாயமான சோதனை நடந்தால் வாகனங்களில் அதிகளவு அரிசி கடத்தப்படுவதை தடுக்க முடியும். அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவது பாராட்டுக்குரியது.

ஏழை மக்களின் பசியைப் போக்கும் ரேஷன் அரிசியை வணிகப்பொருளாக மாற்றுவதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!

படிக்க வேண்டும்

spot_img