கோவையை சேர்ந்த வனஉயிரின புகைப்பட கலைஞர் காண அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தை படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.
கோவை தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ் கோவிந்தராஜூலு. வணிக தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் வனஉயிரின புகைப்படங்கள் எடுப்பதில் கொண்ட ஆர்வம் காரணமாக, கோவை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல்வேறு படங்களை எடுத்துள்ளார். சமீபத்தில் வடஇந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மிகவும் அரிதாக கருதப்படும் கருஞ்சிறுத்தையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
வனஉயிரின புகைப்படங்கள்
அவர் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளாக வனஉயிரின புகைப்படங்களை எடுத்து வருகிறேன். கோவை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வர்ணம் பூசப்பட்ட நாரை (பெய்ன்டட் ஸ்டார்க்) திக்கெல் நீல ஈப்பிடிப்பான் உள்ளிட்ட பல வனஉயிரினங்களின் புகைப்படங்களை எடுத்துள்ளேன்.
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலம் பென்ச் புலிகள் சரணாலய பகுதிக்கு சுற்றுலா சென்றோம். அங்கு மிகவும் அரிதாக பார்வைக்கு தட்டுப்படும் கருஞ்சிறுத்தை ஒன்றை கண்டோம். உடனடியாக எனது கேமராவில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தேன்.
சில நொடிகள் மட்டுமே காண கிடைத்தாலும் அதை மிக அருகில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பகிர்ந்தபோது வன உயிரின புகைப்பட ஆர்வலர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்றார்.