சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் 129 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 76.82 டாலராக சரிந்துள்ளது. நியூயார்க் எண்ணெய் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 71.59 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
சர்வதேச சந்தை விலையை ஒட்டியே இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கச்சா எண்ணெய் இந்த ஆண்டின் உட்சபட்ச விலையான 129 டாலரில் இருந்து 53 டாலர்கள் சரிந்து 76 டாலருக்கு வந்துள்ளது. இரு பீப்பாய் பிரன்ட் கச்சா எண்ணெய் 76 டாலர் என்பது இந்த ஆண்டின் மிக குறைந்த விலையாகும்.
இருந்த போதிலும், ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கத் தயாராக இல்லை. நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் இப்பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து பெட்ரோலியத் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி பேசுகையில், இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் விலை மிக குறைந்த அளவில் மட்டுமே உயர்த்தப்பட்டு இருக்கிறது.
குறைப்பதற்கு வழியில்லை. நவம்பர் 2021 மற்றும் மே 2022 என 2 முறை பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்திருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.
எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வாட் வரியை குறைக்குமாறு மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை, என்று பேசினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கை. இதன் அடிப்படையில் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை.
ஆனால் அதனைப்பற்றி பேசாமல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறை சொல்வது திசை திருப்புவதாக உள்ளது சர்வதேச விலையைப் பொறுத்தே பெட்ரோல், டீசல் விலை உயர்வும் குறைவும் இருக்க வேண்டும். இதனைச் சுட்டிக்காட்டி தான் ஒன்றிய அரசு கடந்த காலங்களில் விலையை உயர்த்தி வந்தது.
ஆனால் இதனை தற்போது கருத்தில் கொள்ளாமல் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல ஒன்றிய அரசு செயல்படுவது நியாயமாகாது.
எனவே, பெட்ரோல், டீசல், காஸ் விலையை குறைக்க முன்வர வேண்டும். அது தான் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு-. இது நடக்குமா?.
ஒருபோதும் நடக்காது என்பது வெட்டவெளிச்சம்!