தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஈரோட்டில் நடமாடும் மயான சேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.
ஈரோடு மாநகராட்சியுடன் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை தொண்டு நிறுவனமும் இணைந்து கடந்த 15 ஆண்டுகளாக ஈரோட்டில் மின் மயானம் நடத்தி வருகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உயிர் இழந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த இதன் ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்தனர்.
அதன் அடிப்படையில், புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எரியூட்டும் வாகனம் வடிவமைக்கப்பட்டு ஈரோட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கிராமப் புறங்களில் இறுதி சடங்கிற்காக ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களுக்கு இந்த வாகனம் நேரடியாக கொண்டு செல்லப்படும்.
அங்கு உயிரிழந்தவர்களது உடல்கள் எரிக்கப்படும்.
ஒரு உடலை எரியூட்டுவதற்கு மக்கள் இதுவரை ரூ.15,000 செலவு செய்து வந்த நிலையில், இதன் மூலம் ரூ.7,500 மட்டுமே செலவாகும். இதனால் பொருளாதார செலவு குறைந்து, கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு எரிபொருள் செலவும் குறைக்கப்படும் என ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களுக்கு வாகனம் நேரடியாக சென்று சேவை செய்வதால் உடல்களை எரிக்கும் சமயத்தில் சுற்றுப் புறச்சூழல் பாதிக்கப்படுவது குறையும் எனக் கூறும் நிர்வாகிகள், ஆத்மா நிறுவனத்தின் ஆம்புலன்சில் இந்த தகன வாகனம் ஏற்றி அனுப்பப்பட்டு, கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி தகனம் செய்யப்பட்டு, குடும்பத்தினரிடம் அஸ்தி வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
குறிப்பாக ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதிகளில் மட்டுமே உடல்களை எரிக்கும் வகையில் இந்த நடமாடும் ஏரியூட்டும் வாகன சேவை திட்டம் செயல்படுத்தப்படுவதாக இந்த ரோட்டரி ஆத்மா அறக்கட்டளையின் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளார்கள். இன்று காலை நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் பலர் கலந்துகொண்டார்கள்.