பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையை சேர்ந்த இளைஞர்கள் இந்தியா முழுவதும் பைக்கில் சென்று பள்ளி கல்லூரிகளில் இது குறித்து பிரசாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் போலீசார் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவையை சேர்ந்த இளைஞர்கள் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பிரசார பயணம்
இந்த பிரசார பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பயணமானது 6 இருசக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைகிறது.
இதற்காக 14 நாட்களில் 7000 கிலோ மீட்டர் 6 இளைஞர்கள் பயணிக்கின்றனர்.
இந்த பிரசார பயணத்தில் வாரணாசி, நாக்பூர், நேபாளம், கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துவதோடு, செல்லும் வழிகளில் இது தொடர்பான துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க உள்ளதாக பயணம் மேற்கொள்பவர்கள் தெரிவித்தனர்.