பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 477 பயனாளி களுக்கு ரூ.5.74 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
கோவை வடக்கு வட்ட வருவாய் துறையின் சார்பில் பாலமலையில் உள்ள அரங்கநாதர் திருக்கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் தொடர்பு முகாமின் தொடக்க நிகழ்ச்சிக்கு நாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்திப் பிரியா சந்துரு ஜெகவி தலைமை வகித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக்கு ழுத்தலைவர் நர்மதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: மாவட்டத்தின் தலைமையிடத்திலிருந்து தொலை தூரங்களில் உள்ள பகுதிகளில் இம்முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க வேண்டும் தமிழக முதல்வர் உத்தரவிட்டதன் பேரில் நடக்கும் இம்முகாமில் பாலமலை, ஆனைகட்டி வனப்பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் அடித்தட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடத்தப்படும் குறைதீர் முகாமில் பெறப்படும் மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படுகின்றன.
மாநிலத்திலேயே பாலமலையில் முதன்முதலாக -ஜி.பி.எஸ் கருவி மூலம் மாவட்ட வன உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்திற்கு என்ன தேவைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் வகையிலேயே இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன.
விழிப்புணர்வு அரங்குகள்
அரசுத்துறைகளின் சார்பில் வழங்கப்படும் உதவிகள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் தகுதியானவற்றை மக்கள் பெற்று பயனடைய வேண்டும் என்றார்.
தொடர்ந்து 210 குடும்பங்களுக்கு தனிநபர் பட்டாக்களும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள 2776 பணிகள் தொடங்குவதற்கான ஆணைகளையும், மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், வேளாண்மை, ஆதிதிராவிடர் நலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வனத்துறை சார்பிலான உதவிகளை பயனாளிகளுக்கு அவர் வழங்கினார்.
அப்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அலர்மேல் மங்கை, மாவட்ட வன அலுவலர் டி.கே.அசோக்குமார், வருவாய் கோட்டாட்சியர் பூமா, மகளிர் திட்ட இயக்குநர் செல்வம், கூடலூர் நகர் மன்றத் தலைவர் அ.அறிவரசு கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் மருத்துவர் பெருமாள்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ருக்மணி மூர்த்தி வார்டு கவுன்சிலர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனையடுத்து கோவனூரில் செயல்படும் நியாயவிலைக்கடை, அங்கன்வாடி மையம், நாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நலவிடுதி ஆகியவற்றிலும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.