தேனி மாவட்டம், கம்பம் நகராட்சிப் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரசந்தை கட்டுமானப்பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.76 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன், செய்தியாளர்கள் பயணத்தி ன்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கம்பம் நகராட்சிப் பகுதியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ. 775 லட்சம் மதிப்பீட்டில் 262 எண்ணம் உட்புற கடைகள், 23 எண்ணம் கொண்ட வணிக வளாகக் கட்டிடம், உணவகக்கட்டிடம், 4375 ச.மீட்டரில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தைக்கான கட்டுமானப்பணி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆலமரம் நகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.50 லட்சம் மற்றும் 26 லட்சம் மதிப்பீட்டில் 2 பணிகள் தேர்வு செய்யப்பட்டு, இதில் ரூ.33 லட்சம் பொது மக்களின் பங்களிப்புடன்4 வகுப்பறை கட்டிடம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும் 2 வகுப்பறை கட்டிடம் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றது.
இக்கட்டிடத்தில் பூச்சு வேலை மற்றும் தரையில் டைல்ஸ் கற்கள் பதிக்கப் பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:
தமிழக அரசு நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கிற பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை செயல்படுத்தி, அதன்மூலம் அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள பொது மக்கள் படித்து பயன்பெறும் வகையில் நூலகங்கள் கட்டுதல், ஏழை, எளிய மக்கள் குறைந்த செலவில் நிகழ்ச்சிகள் நடத்திட சமுதாயக்கூடங்கள் கட்டுதல், சிறு வணிகர்கள் பயன் பெறும் வகையிலும், உள்ளுர் விவசாயிகள் வெளியூர் சென்று சிரமப்படாத வகையில் உள்ளுரிலேயே வணிகம் செய்யும் பொருட்டு சந்தைகள் அமைத்தல், பொது மக்கள் எளிதில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் வகையில் சாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நமக்கு நாமே திட்டம்
அதனைப் போன்று, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்ப றைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், பொது சுகாதார கழிப்பறை கட்டுதல், பொது மயான த்தில் சுற்று சுவர் கட்டுதல், இயந்திர தளவாடங்கள் கொள்முதல் செய்தல், சாலை அமைத்தல், பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கம்பம் நகராட்சிப் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் தெரிவித்தார்.ஆய்வின் போது, கம்பம் நகராட்சி ஆணையாளர் பால முருகன், பொறியாளர் பன்னீர் உட்பட பலர் உடனிருந்தனர்.