fbpx
Homeதலையங்கம்சீண்டும் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

சீண்டும் அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!

புதுடெல்லியில் நடந்த அலுவல் மொழித் தொடர்பான நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் – உள்துறை அமைச்சர் அமித்ஷா, மொழிகள் குறித்து பேசிய கருத்து உன்னிக் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஆகும். குறிப்பாகத் தமிழ் மொழியைச் சீண்டிப்பார்ப்பதாகவே இருந்தது.

அமித்ஷா எப்போதுமே இந்திக்காக வாதாடும் பிரபல வழக்கறிஞர் என்பது போலத் தான் தம்மை காட்டி வந்திருக்கிறார்; காட்டிக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இம்முறை வம்பை விலை கொடுத்து வாங்குவது போல அவர் பேசி இருக்கிறார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அவமதிப்பது போன்ற கருத்தை உமிழ்ந்து இருக்கிறார்.

தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளை உயர்த்துவது போல உயர்த்தி, தாழ்த்திப் பேசி இருக்கிறார். இந்த இரட்டை வேடம் தமிழகத்தில் எடுபடாது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ளவை 22 மொழிகள் ஆகும். அதன் தலைப்பு ‘மொழிகள்’ என்பது தான். இதன்படி அனைத்து மொழிகளுமே தேச மக்களால் பேசப்படும் தேசிய மொழிகளே.

ஆனால் பன்மொழிகள் பேசும் மக்களின் மொழிகளை, வெறும் உள்ளூர் மொழிகள் (Local Languages) என்ற சொற்றொடர் மூலம் கொச்சைப் படுத்தியுள்ளார், அமித்ஷா.

அதோடு நிறுத்தினாரா? இல்லை. `எதிர்ப்பின்றி இந்தியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேறு பிதற்றி இருக்கிறார்.
இந்தி மட்டுமே தேசிய மொழி என்று அரசமைப்புச் சட்டத்தில் எங்காவது கூறப்பட்டு இருக்கிறதா?… இல்லையே-.

அப்படியிருக்க மற்ற மொழிகளை ‘உள்ளூர் மொழிகள்’ – ‘லோக்கல் மொழிகள்’ என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அதிலும் தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் நாட்டு மக்கள் சார்பில் கடுமையான கண்டனத்தை உடனடியாகப் பதிவு செய்துள்ளார்.
‘‘உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும்.

இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல’’ என்று நமது முதலமைச்சர் சம்மட்டி அடி போல பதிலடி கொடுத்திருக்கிறார். மீண்டும் 1965 ல் நடந்தது போல ஒரு மொழிப்போருக்கு வித்திட்டு விடாதீர்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எச்சரித்து இருக்கிறார்.

தமிழ் செம்மொழி; உலகத்தின் பல நாடுகளில் ஆட்சி மொழி; மக்கள் மொழி; அத்தகுதி இந்திக்கோ, சமஸ்கிருதத்திற்கோ உண்டா? அரசமைப்புச் சட்டத்திற்கு இந்தி, சமஸ்கிருதம் ஆகிய இருமொழிகளே தேவை என்பது திணிப்பு அல்லாமல் வேறு என்ன?

மீண்டும் மொழிப் போர் வெடித்து விடக்கூடாது என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எச்சரிக்கை. இதனை ஒன்றிய ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டின் மொழிப்போர் வரலாற்றை ஊன்றிப்படித்திருந்தால் இந்தியைத் திணிக்க முற்படும் எவரும் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள்.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஹிந்தி பேசாத பல்வேறு மாநிலங்களிலும் அந்த மொழித் திணிப்புக்கு எதிரான அறப்போர் உரிமைப் போராக ஆவதை ஒன்றிய ஆட்சியாளர்கள் விரும்ப மாட்டார்கள் என நம்புவோம். ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.

வேண்டாம் விபரீத விளையாட்டு!

படிக்க வேண்டும்

spot_img