ஒரு காலத்தில் அமெரிக்கா – சோவியத் இடையே விண்வெளி போட்டி மிக தீவிரமாக இருந்து வந்தது. அப்போது ஸ்புட்னிக் உள்ளிட்ட விண்வெளி திட்டங்கள் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் முதல் இடத்தில் இருந்தது.
1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலமே முதலில் நிலவைச் சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும்.
அந்த அளவிற்கு இந்த திட்டங்களில் சோவியத் முன்னிலையில் இருந்தது. ஆனால் இன்னொரு பக்கம் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த நாஸாவோ சோவியத் யூனியனை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நேரடியாக நிலவிற்கு மனிதர்களை அனுப்ப முடிவு செய்தது.
அதன் முடிவாக அப்பல்லோ 11 விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 20, 1969 அன்று நிலவில் முதல் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியில் நாசா வென்றது.
ஆனால் அதன்பின்பெல்லாம் விண்வெளி பயணங்களுக்கு நாசா என்னவோ ரஷ்யாவைத்தான் நம்பி இருந்தது. அதன்பின் ரஷ்யாவும் பெரிதாக விண்வெளி ஆராய்ச்சிகளில் நேரடியாக கவனம் செலுத்தவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் மீண்டும் கடந்த 10 வருடங்களாக விண்வெளி ஆராய்ச்சியில் ரஷ்யா கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில்தான் நிலவின் தென் துருவத்தை ஆராய ரஷ்யா லூனா 25 திட்டத்தை விண்ணுக்கு அனுப்பியது. கடந்த 50 வருடங்களில் நிலவிற்கு ரஷ்யா அனுப்பும் முதல் ஆய்வு திட்டம் ஆகும் இது.
இந்த லூனா 25 லேண்டர் நிலவில் உயரும் குறைக்கும் நேரத்தில் அப்படியே கட்டுப்பாட்டை இழந்து விழுந்துள்ளது.
தென் துருவத்தில் இந்த 800 கிலோ எடை கொண்ட லூனா 25 தரையிறங்கி சாதனை படைக்க இருந்தது. ஆனால் உயர குறைப்பு செய்யும் போது இது கீழே விழுந்துவிட்டது.
இந்தியாவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் முன் வேகமாக இறங்க வேண்டும் என்று லூனா 25 அவசரமாகவே நிலவிற்கு அனுப்பப்பட்டது. நிலவின் தென் பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெயர் இருக்க வேண்டும் என்று ரஷ்யா நினைத்தது.
இதன் காரணமாகவே சந்திரயான் 3 அனுப்பப்பட்ட பின் அவசர அவசரமாக லூனா 25 அனுப்பப்பட்டது. லூனா 25 வின் உயரத்தை குறைக்க அதற்கு கொடுத்த கமெண்ட்டை லூனா 25 ஏற்கவில்லை. மாறாக லூனா 25 கமெண்ட்டை தவறாக எடுத்துக்கொண்டு மொத்தமாக போய் நிலவில் விழுந்துள்ளது.
ஆனால் இதை கொண்டாட எதுவும் இல்லை. லூனா 25 தோல்வி என்பது ரஷ்யாவின் தோல்வி அல்ல. அது அறிவியலின் தோல்வி. ஒரு காலத்தில் இந்தியாவின் விண்வெளி பயணங்களுக்கு உதவியது என்னவோ ரஷ்யா என்ற ஒரே நாடுதான்.
உலக நாடுகள் இந்தியாவிற்கு கிரையோஜெனிக் எஞ்சின் தராத போது விண்வெளி ஆய்வுகளை செய்ய உதவியது ரஷ்யா மட்டுமே.
நாளை சந்திரயான் 3 வெற்றிபெறும் பட்சத்தில் அது இந்தியாவின் வெற்றியாக மட்டும் இருக்காது. அறிவியலின் வெற்றியாகவும் இருக்கும்.
சந்திரயான் 3 வெற்றியைக் கொண்டாட நம்பிக்கையுடன் காத்திருப்போம்!