மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சர்வதேச தலைமையகமான அமிர்தபுரி, மாதா அமிர்தானந்தமயி தேவியின் 70-வது பிறந்த நாள் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டு நாட்கள் கொண்டாடப்பட்டது.
மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு போஸ்டன் குளோபல் ஃபோரம் (பிஜிஎஃப்), மைக்கேல் டுகாகிஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் லீடர்ஷிப் அண்ட் இன்னோவேஷன் (எம்டிஐ) இணைந்து ‘அமைதி மற்றும் பாதுகாப்புக்கான உலகத் தலைவி’ விருது வழங்கி கௌரவித்தது.
பிறந்தநாள் செய்தியில், ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கூறுகையில், ஒவ்வொரு பேரிடரும் – அது ஒரு தொற்றுநோய், இயற்கை பேரழிவு அல்லது காலநிலை மாற்றம் என இருக்கலாம் – மனித குலத்தை மூன்று விஷயங்களை வளர்க்க தூண்டுகிறது: ஒத்துழைப்பு, தோழமை மற்றும் ஒற்றுமை. அதாவது, சக மனிதர்களுடன் ஒத்துழைத்து, இயற்கையோடு தோழமை, கடவுளோடு இணைந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் – குறைந்த பட்சம் சிறிதளவு – நமது எல்லா செயல்களையும் எதிர்மறையாக பாதிக்கும் என்றார்.
நிகழ்வில், 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான், கேபினட் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, மத்திய அமைச்சர்கள் அஷ்வினி குமார் சௌபே, வி.முரளீதரன், சட்டப்பேரவை துணை சபாநாயகர் சித்தயம் கோபகுமார், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வீடியோ உரையில் கூறியதாவது:
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அம்மாவுடன், குறிப்பாக குஜராத்தின் கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்ற முக்கியமான தருணங்களில், நெருங்கிய தொடர்பை பேணி வருகிறேன். அமிர்தபுரியில் அம்மாவின் 60-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அம்மாவுடன் நான் பகிர்ந்து கொண்ட தருணங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் அனைவரோடும் இன்றைய கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவும் நான் முன்வந்திருக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
அன்றும் இன்றும் அம்மாவின் கருணை நிறைந்த புன்னகையும் பாசமும் அளவற்ற மகிழ்ச்சியைத்தருகிறது. கடந்த பத்தாண்டுகளில், அம்மாவின் முன்முயற்சிகள் மற்றும் செல்வாக்கு உலகளவில் விரிவடைந்து, எண்ணற்ற நபர்களின் வாழ்க்கையை வளப்படுத்தி, அவர்களுக்கு சக்தி அளித்துள்ளது. அம்மாவின் பிரசன்னம் மற்றும் கருணையின் ஆழமான தாக்கத்தை வார்த்தைகளால் மட்டும் தெரிவிக்க முடியாது. அதை நேரடியாக அனுபவிக்க வேண்டும்.
அம்மாவின் அயராத சேவை மற்றும் மனிதாபிமான முயற்சிகள் மூலம் உலகெங்கிலும் உள்ளவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திய அம்மாவின் அளவற்ற இரக்கமும், அசையாத அர்ப்பணிப்பும் தொடர்ந்து செழிக்க பிரார்த்திக்கிறேன் என்றார்.
மேலும், 2020, 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான அமிர்தகீர்த்தி புரஸ்கார்கள், பேராசிரியர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், பேராசிரியர் ஸ்ரீவரஹம் சந்திரசேகரன் நாயர், ஆச்சார்யஸ்ரீ எம்.ஆர்.ராஜேஷ், எழுத்தாளர் டாக்டர் எஸ்.எல். பைரப்பா ஆகியோருக்கு சனாதன தர்மத்தின் தத்துவம் மற்றும் கலாச்சாரத்திற்கு அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக வழங்கப்பட்டது.