தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நலவாழ்வு நடைப்பயிற்சி சாலைகள் என்பதை ஏற்படுத்திடும் அரிய சாதனைத் திட்டத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் முதல் வாரத்தில் தொடக்கி வைக்க இருக்கிறார்.
தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பானுக்குச் சென்றபோது, இதுபோன்ற நல வாழ்வு நடைப்பயிற்சி சாலைகளைப் பார்த்து, மகிழ்ந்து, விவரம் அறிந்து வந்து, நமது முதலமைச்சரிடம் தெரிவித்தவுடனேயே, அதுபற்றிய விவரங்களை அறிந்து உடனடியாக அதனைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
ஜப்பானில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு மட்டும் அமைக்கப்பட்டிருந்த இந்த சாலை நடைப்பயிற்சியாளர்களுக்கு மட்டும் என்பது சிறப்பானது. அந்த நாட்டில் முதியோர்கள் மக்கள் தொகை மிக அதிகம்; காரணம் முதியவர்களின் நடைப் பயிற்சியும், உடற்பயிற்சியும்தான்.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் நலவாழ்வு நடைப்பயிற்சி சாலை அமையவிருக்கிறது. இந்த சாலையில் அனைவருமே நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டாலும் அந்த சாலையிலேயே முதுகுடி மக்களுக்கென ஒரு தனி டிராக் ஒன்றை அமைத்தால் -நலமாக இருக்கும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனையும் செய்தால் மற்றவர்கள் வேகத்தில் முதியோர்கள் பங்கேற்க முடியாத நிலையிலும் – அவர்களுக்கென பாதுகாப்பான நடைபயிற்சி நலனை அவர்களால் பெற முடியும். வாய்ப்புள்ள இடங்களில் இந்த வசதியை தமிழ்நாடு அரசு செய்திட வேண்டும்.
உடற்பயிற்சி என்பது உடல்நலத்திற்கு மட்டும் அல்ல. அப்போது நமக்கு கிடைக்கும் நண்பர்களோடு உரையாடுவதன் மூலம் மன நலனும் கிடைக்கும். இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் பாராட்டுகள்.
அனைவரும் நாளும் நடந்து பழகுவோம்!