fbpx
Homeதலையங்கம்10 ரூபாய் நாணயத்துக்கு உரிய மதிப்பு கிடைக்குமா?

10 ரூபாய் நாணயத்துக்கு உரிய மதிப்பு கிடைக்குமா?

கடந்த 2009 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை புழக்கத்தில் விட்டது. தொடக்கத்தில் “வேற்றுமையில் ஒற்றுமை” மற்றும் “இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்“ என்ற கருப்பொருளுடன் அந்த நாணயம் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து வெவ்வேறு வடிவமைப்புகளில் ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயத்தை வெளியிட்டு வந்தது.

பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் 10 ரூபாய் நாணயத்தில் போலிகள் வருவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. அதேபோல் 10 ரூபாய் நாணயமே செல்லாது என்று கூறப்பட்டது. பல ஆண்டுகளாக இந்த வதந்தியை மக்கள் நம்பி வருகிறார்கள்.

இதன் காரணமாக சில்லரை வணிக கடைக்காரர்கள், வியாபாரிகள் தொடங்கி பேருந்து நடத்துநர்கள் வரை எல்லா இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர். இதன் காரணமாக, பொதுமக்களும் பத்து ரூபாய் நாணயங்களை பெறுவதற்கும், தங்களிடம் வைத்திருக்கவும் தயங்குகின்றனர்.

ரிசர்வ் வங்கி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதன்படி பேருந்து ஊழியர்களிடம் ரூ.10 நாணயங்களை வாங்க மாநில அரசிடம் அறிவுறுத்துவது, இது பற்றிய விழிப்புணர்வு போஸ்டர்களை ஒட்டுவது, அனைத்து வங்கிகள் மூலமாக விளம்பரங்களை வெளியிடுவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. எத்தனை விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த நிலையில்தான், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சாட்டையைச் சுழற்றி உள்ளார். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என அறிவித்து உச்சக்கட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பது பாராட்டத்தக்கது.

எனவே 10 ரூபாய் நாணயத்தை வாங்க வியாபாரிகளோ பேருந்து நடத்துனர்களோ அல்லது யாராக இருந்தாலும் வாங்க மறுத்தால் உடனே புகார் செய்ய நுகர்வோர்கள் முன்வர வேண்டும்.

அப்போது தான் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். நாலைந்து வழக்குகளில் சிறை தண்டனை கிடைத்தாலே… சிறை தண்டனை கொடுக்கும் வரைகூட காத்திருக்கத் தேவையில்லை, புகார்கள் செய்து வழக்குகள் பதியப்பட்டாலே போதும் 10 ரூபாய் நாணயத்துக்கு உரிய மதிப்பு கிடைத்துவிடும்.

எனவே, இதே போன்ற அறிவிப்புகளை பிற மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட வேண்டும். அறிவிப்போடு நின்றுவிடாமல் அதன் மீதான தொடர் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நாணயமே செல்லாக்காசாகி, மதிப்பு இல்லாமல் போவது ஒரு வகையில் உலக அரங்கில் நாட்டுக்கே அவமானம் என்றால் கூட மிகையாகாது.

10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கதாக மாறி மற்ற நாணயங்களைப் போல புழக்கத்தில் வரட்டும். பூனைக்கு ராமநாதபுரம் ஆட்சியர் மணி கட்டி விட்டார்.
10 ரூபாய் நாணயத்துக்கு அதற்குரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்க மணியோசை நாடெங்கும் ஒலிக்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img