விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்போதைக்கு பலம் வாய்ந்த கூட்டணியாக இருப்பது திமுக மட்டுமே. அந்தவகையில், அடுத்தகட்ட அதிரடியில் திமுக முனைப்பு காட்ட துவங்கி உள்ளது.
கடந்த தேர்தலை பொறுத்தவரை, திமுகவின் வெற்றியில் கனிமொழியின் பங்கு அபாரமானது. அளவிட முடியாதது. அர்ப்பணிப்பு நிறைந்தது. அன்று பொள்ளாச்சி சம்பவம் மற்றும் சாத்தான்குளம் சம்பவம் என தமிழகத்தை உலுக்கிய 2 பிரச்சனைகளை, கையில் எடுத்து போராடியவர்களில் முதன்மையானவராகவும் கனிமொழி திகழ்ந்திருக்கிறார்.
இதோ இப்போதுகூட கனிமொழியின் அணுகுமுறையானது மக்களின் கவனம் பெற்று வருகிறது. ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு, மறுபக்கம் விறுவிறு செயல்பாடு என களமிறங்கிவிட்டார்.
அதைவிட முக்கியமாக, சமீபத்தில் நடந்த மகளிர் மாநாடும் தேசிய அளவில் கனிமொழி மீதான கவனத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவின் கனகச்சிதமான பிளான்களும் துரிதமாகி வருகின்றன.
எப்படியும் இந்த முறையும், தூத்துக்குடி தொகுதியிலேயே கனிமொழி போட்டியிட நிறைய வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். இதில், முக்கியமானது கனிமொழியின் பிரச்சாரமாகும். எனவே, கனிமொழி + உதயநிதி இவர்கள் 2 பேரும்தான்,
தமிழகம் முழுக்க திமுகவின் பிரச்சாரங்களை பிரதானமாக முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வைத்து அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வரும்நிலையில், அந்த வியூகங்களை அடியோடு உடைக்கவும், கனிமொழியின் பிரச்சாரம் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
கனிமொழி அளவுக்கு ஈடுகொடுத்து பேசக்கூடிய பெண் பேச்சாளர்கள் அதிமுகவில் தற்சமயம் இல்லை. எனவே, திமுகவில் பெண்களின் ஓட்டுக்களை கணிசமாக பெறும் அளவுக்கு, கனிமொழியின் பலம் தற்போது பெருகியிருப்பதும் பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது. அதேபோல பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்திலும் கனிமொழியின் நிலைப்பாடு உறுதியாக உள்ளது.
தற்போது கூட, அண்ணாமலை பற்றி செய்தியாளர்கள் கனிமொழியிடம் கேட்டார்கள். “அறநிலையத்துறை என்ற ஒன்று பாஜக ஆட்சிக்கு வந்த நாளில் இருக்காது” என்று அண்ணாமலை பேசியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, “ஆட்சிக்கு வந்தால்தானே? பாஜக ஆட்சிக்கு வந்தால் பார்ப்போம்“ என்று ஒற்றைவரியில் கூலாக பதிலளித்திருந்தார்.
ஆக, ஒருபக்கம் பாஜக எதிர்ப்பு + மறுபக்கம் மகளிர் ஓட்டுக்கள் + இதற்கு நடுவில் நலத்திட்ட உதவிகள் என எம்பி தேர்தலுக்கு தயாராகி வருகிறார், கனிமொழி கருணாநிதி. இதை அதிமுக, பாஜக கட்சிகள் உற்றுகவனித்து கொண்டிருக்கின்றன.
கனிமொழி எம்பி முன்னெடுக்கப்போகும் பிரசாரம் திமுக கூட்டணிக்கு பேராதரவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!