ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதித்து தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
இந்த வழக்குகளில் நேற்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து நிறைவேற்றப்பட்ட சட்டம் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் நிறுவனங்களின் கோரிக்கையை நிராகரித்தனர்.
அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்தது செல்லும் என தீர்ப்பளித்த நீதிபதிகள், திறமைக்கான ஆன்லைன் விளையாட்டுக்களான ரம்மி, போக்கர் விளையாட்டுக்களைத் தடை செய்த பிரிவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதாவை நிலுவையில் வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி தாமதம் செய்தது முக்கியமாக பார்க்கப்படுகிறது. தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்புதல் கொடுக்காமல் நீண்ட நாட்கள் மசோதாவைக் கிடப்பில் வைத்திருந்து பிறகு மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பினார்.
இதையடுத்து மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து ஆளுநர் வேறு வழியில்லாமல் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். பின்னர் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்திருக்கும் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு, ஆளுநரின் நிலுவை
கலாச்சாரத்துக்கும் சேர்த்தே ஒரு குட்டு வைத்திருக்கிறது.
ஏற்கனவே பஞ்சாப் மாநில ஆளுநர் பல மசோக்களை கிடப்பில் போட்டு வைத்திருந்ததை எதிர்த்து அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில் “தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக் கூடாது” என்று எச்சரிக்கையாகவும் கிண்டலாகவும் உச்சநீதிமன்றம் கண்டித்து இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பி வைப்பட்ட 14 சட்டமுன் வடிவுகளுக்கு அனுமதி தராமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறார் ஆளுநர் ரவி. இதுபோல் 8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் அனுமதி தரவில்லை. வழக்கு போட்ட பிறகு பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் செயல்படத் தொடங்கி இருக்கிறார்.
இந்த வழக்குகள் அனைத்தும் மொத்தமாக இன்று (10 ஆம் தேதி) விசாரணைக்கு வர இருக்கின்றன. இதன் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருந்துவாரா?
திருந்துவார் என நம்புவோம்!