fbpx
Homeதலையங்கம்அந்த பரம ரகசியத்தை வெளியிடுவாரா ஓ.பி.எஸ்?

அந்த பரம ரகசியத்தை வெளியிடுவாரா ஓ.பி.எஸ்?

அதிமுகவைக் கைப்பற்றும் அல்லது அங்கே தன் ஆளுமையை நிலைநாட்டும் எல்லா முயற்சியிலும் சட்டப்போராட்டத்திலும் பின்னடைவைச் சந்தித்த போதிலும் ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. மாறாக 2024 தேர்தல் மூலம் ஏதோ ஒரு வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க சுற்றுப்பயணம் புறப்பட்டு இருக்கிறார்.

பாஜக கூட்டணி உறவை எடப்பாடி பழனிசாமி முறித்துக்கொண்டாலும் பிரதமராக மோடி தான் மீண்டும் வரவேண்டும் எனச்சொல்லி பாஜகவுடன் உறவோடு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இப்போது அவர் திடீரென எடப்பாடி பழனிசாமியுடன் நேரடியாக மோதும் அஸ்திரத்தைக் கையிலெடுத்து இருக்கிறார்.

இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து இருக்கிறது.
நான் சில ரகசியங்களை வெளியிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குச் சென்று விடுவார் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கி போட்டிருக்கிறார், ஓ.பன்னீர்செல்வம்.

அதற்குப் பதிலடியை உடனடியாக தந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தான் சிறைக்குச் செல்வார். அவருக்கு அப்படி என்ன தான் தெரியும்? என்ன ரகசியம் தெரியுமோ அதனைச் சொல்லுய்யா...என்று கொச்சைத் தமிழில் அர்ச்சனை செய்து இருக்கிறார்.

இருவருமே மாறிமாறி சிறை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளனர். இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. யார் தவறு செய்திருந்தாலும் சிறைக்குப் போய்த் தான் ஆக வேண்டும். அது நடக்கிறபோது நடக்கட்டும்.

ஓபிஎஸ் -இபிஎஸ் விவகாரத்தில் இப்போது மக்கள் மனதில் தோன்றியிருக்கும் ஒரே கேள்வி – ஓ.பன்னீர்செல்வம் மனதில் புதையுண்டு கிடக்கும் அந்த ரகசியம் என்ன? என்பது தான்.

அந்த ரகசியத்தை அவர் வெளியிடுவாரா? எடப்பாடி பழனிசாமியை சிறையில் தள்ளும் என்றால் அது மிகமிக முக்கியமான ரகசியமாகத் தானே இருக்கும்?
ஓ.பன்னீர்செல்வம் அவர்களே, பரம ரகசியத்தை உடனே வெளியிடுங்கள். அது அதி தீவிர அரசியல் புயலாக இருக்குமா? என்பதை அறிய தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்!

படிக்க வேண்டும்

spot_img