தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் என்ற அடிப்படையில் “ உங்களைத்தேடி உங்கள் ஊரில் “ என்ற புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
அதன் அடிப்படையில் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து,மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் “ உங்களைத்தேடி உங்கள் ஊரில் “ என்ற திட்டம் மாவட்ட ஆட்சியரால் வட்ட அளவில் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
அதன் ஒருபகுதியாக இன்று காலை மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் வந்தடைந்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை துவக்கி வைத்து மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு போக்குவரத்து கழகம், பாரதி நகர் நியாய விலைக்கடை, குடிநீர் பணிகள், கால்நடை மருத்துவமனை, காவல்நிலையம் உட்பட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பொதுமக்கள் தங்கள் குறைகளுக்கான மனுக்களை உரிய அலுவலர்களிடம் நேரில் அளித்தும் அல்லது மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4 மணியளவில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்தும் பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.