fbpx
Homeதலையங்கம்பாஜகவா, அதிமுகவா? எந்தப் பக்கம் பாமக?

பாஜகவா, அதிமுகவா? எந்தப் பக்கம் பாமக?

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே எஞ்சியுள்ளன. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கூட்டணி, தொகுதி பங்கீடுப் பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. திமுக தனது கூட்டணி கட்சிகளை உறுதி செய்து, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

அதிமுக இந்த தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுமா? அல்லது தனித்து போட்டியிடுமா? என்று தெரியவில்லை. கூட்டணி தொடர்பாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழக பாஜக தலைமை மூன்றாவது அணியை உருவாக்க முனைப்பு காட்டி வருகிறது. பாஜக, பாமக, தேமுதிக, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பாரி வேந்தரின் ஐஜேகே, ஏசி சண்முகம் மற்றும் சில சிறிய கட்சிகளை இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். கூட்டணி தொடர்பாக கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடம் அண்ணாமலை ஆலோசனை நடத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வரும் 11 ஆம் தேதி சென்னை வருகிறார். அப்போது, தேர்தல் பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே அதற்குள் கூட்டணியை இறுதி செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் மோடி வரும் 25 ஆம் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார்.

மோடி தமிழகம் வருவதற்குள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருங்கிணைத்து தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றுவதற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாஜகவிடம் பாமக 12 தொகுதிகளைக் கேட்டதாகவும், ஆனால் 7 தொகுதிகளை மட்டுமே பாஜக தருவதாகவும் தகவல் வெளியானது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுர இல்லத்தில் சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது.இவ்வாறாக தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்ட நிலையில், ஒரே நேரத்தில் பாஜகவுடனும் அதிமுகவுடனும் பாமக பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது.

பாஜகவுடன் இணைந்தால், பாமக கேட்கும் தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், வெற்றி வாய்ப்பு என்பது அந்தக் கூட்டணியில் மிகவும் குறைவு. அதிமுகவுடன் இணைந்தால் கேட்கும் இடங்கள் கிடைப்பது கடினம். ஆனால், வெற்றிக்கான வாய்ப்பு என்பது சற்று அதிகம் என சொல்லப்படுகிறது.

பாஜகவுடன் கூட்டணி அமைத்து, வேண்டிய தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் பாமக பெற்றுக்கொள்ளும் என்னும் கருத்தும் அரசியல் நோக்கர்களால் முன்வைக்கப்படுகிறது.

எந்த கூட்டணியில் சேருவது என்பதில் மதில் மேல் பூனையாக பாமக நின்று கொண்டிருக்கிறது. ஆதாயம் என்னும் நல்ல இரை எந்த பக்கம் அதிகமாக கிடைக்குமோ அந்த பக்கம் தான் பாமக தாவிக்குதிக்கும். அது எந்த பக்கம் என்பதற்கு ஓரிரு நாட்களில் விடை கிடைத்து விடும்!

படிக்க வேண்டும்

spot_img