கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கிராபியோ கிளப் மற்றும் ஓவியர். ந. தமிழரசனின் ஈரநிலம் அறக்கட்டளையும் இணைந்து “பறவைகள் உலகின் காப்பான்” என்ற மையக்கருத்தில் பறவைகள் குறித்த விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நேற்று கேபி ஆர் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியை சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து இந்த கண்காட்சியை பார்வையிட்ட கல்லூரி முதல்வர் சரவணன் சுற்றுப்புறச் சூழலிலும், மனிதனின் வாழ்வியலிலும் பறவைகளின் பங்கினைப் பற்றிக் குறிப்பிட்டு, பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
இவ்விழாவில் சிறப்பு விருத்தினாராகப் பங்கேற்ற கடலூர் ஈரநிலம் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் ஓவியர் தமிழரசன் பேசியதாவது: இயற்கையோடு இயைந்து வாழ்வதோடு மனிதன் இயற்கையை அவசியமாக பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்காவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.
61 ஓவியங்கள் இடம் பெற்ற இக்கண்காட்சியில், பறவைகளின் இயற்கை சார்ந்த வாழ்வு, மனிதனும் பறவைகளும், உலகின் மேற்பரப்பில் பறவைகள் பற்றிய
வண்ண ஓவியங்கள், நவீன வண்ணக்கலவைகளுடன் கூடிய ஓவியங்கள் என பல்வேறு ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இவ்விழாவில் முன்னதாக கல்லூரியின் உயிர் மருத்துவத் துறைத் தலைவர் முனைவர். கணேஷ்குமார், வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முடிவில் சங்கமம் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். ராஜேஷ்குமார் நன்றியுரையாற்றினார்.