கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் உலகளாவிய அங்கீகாரம் பெற்ற ரேலா மருத்துவமனையானது, ஷேக் ஃபாசிலதுன்னெசா முஜிப் நினைவு KPJ (SFMMKPJ) மருத்துவமனையுடன், பங்களாதேஷில் ஒரு விரிவான கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை நிறுவ ஒன்றிணைந்துள்ளது.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம், இந்தியாவுக்கான வங்காளதேசத்தின் துணை உயர் ஆணையர் H. E.ஷெல்லி சலேஹின், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் முகமது ரேலா மற்றும் SFMMKPJ மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது தௌபிக் பின் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின் படி, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ரேலா மருத்துவமனையானது, ஒரு அதிநவீன கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை அமைப்பதற்கும் இயக்குவதற்கும் ஏதுவாக, SFMMKPJ மருத்துவமனைக்கு விரிவான பயிற்சி மற்றும் ஆதரவை வழங்கும்.
இந்த மருத்துவமனையை புகழ்பெற்ற மலேசிய தனியார் சுகாதார சேவை நிறுவனமான KPJ ஹெல்த்கேர் பெர்ஹாட் நிர்வகிக்கிறது. ரேலா மருத்துவமனையின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், SFMMKPJ மருத்துவமனையானது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான சிறந்த பிராந்திய மையமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது தேவைப்படும் நோயாளிகளுக்கு நம்பிக்கையையும் குணப்படுத்துதலையும் வழங்குகிறது.