fbpx
Homeபிற செய்திகள்தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் ஓட்டெடுப்பு மூலம் 88 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தேனி அல்லிநகரம் நகராட்சி கூட்டத்தில் ஓட்டெடுப்பு மூலம் 88 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தேனி அல்லிநகரம் நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாஷா, நகர்மன்றத்துணைத் தலைவர் வக்கீல்.செல்வம் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர்மன்ற கவுன்சிலரும், நகர திமுக செயலாளருமான நாராயணபாண்டியன், முன்னாள் நகர் திமுக பொறுப்பாளரும், நகர்மன்ற கவுன்சிலருமான பாலமுருகன் உள்ளிட்ட திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் அணியை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பித்ததும் மொத்தம் 88 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. தீர்மானம் வாசிக்கத் தொடங்கியதும், கவுன்சிலர் ராஜ்குமார் எழுந்து, கூட்டத்தில் கொண்டு வரப்பட்ட மொத்தமுள்ள 88 தீர்மானங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன் மொத்த தீர்மானத்தில் ஏதாவது ஒரு தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பினால் அது குறித்து விவாதிக்கலாம்.

ஒட்டுமொத்த தீர்மானங்களையும் ஒத்தி வைக்க முடியாது என்றார். அப்போது குறுக்கிட்ட நகர்மன்றத் துணைத் தலைவர் வக்கீல்.செல்வம் அனைத்து தீர்மானங்களையும் ஒத்திவைக்க வேண்டும் என்றார். அப்போது, நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர்பாஷா ஒட்டுமொத்த தீர்மானங்களையும் ஒத்திவைக்க முடியாது என்றார்.

இதற்கு ஒட்டெடுப்பு நடத்த வேண்டும் என கவுன்சிலர்கள் சிலர் வலியுறுத்தினர். அப்போது தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும் என்போர் எத்தனை பேர் என்ற போது 14 கவுன்சிலர்கள் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்து எழுந்து நின்றனர்.

மொத்தமுள்ள 32 உறுப்பினர்களில் 14 கவுன்சிலர்கள் மட்டும் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும் என்றதால், அதிகபட்ச உறுப்பினர்களின் ஆதரவுடன் 1 முதல் 88 தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக நகர்மன்றத் தலைவர் ரேணுபிரியாபாலமுருகன் அறிவித்து கூட்டத்தை முடித்தார். இதனையடுத்து, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்ட அரங்கத்தை விட்டு சென்றனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

படிக்க வேண்டும்

spot_img