fbpx
Homeதலையங்கம்சட்டப்பேரவை மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும்!

சட்டப்பேரவை மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும்!

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டப்பேரவை மரபுபடி தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசித்துக் கூட்டத் தொடரை தொடங்குவதுதான் வழக்கம். அதன்படி நேற்று கூட்டத் தொடர் தொடங்கியது.

ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை வாசிக்க மறுத்துவிட்டார். மேலும் தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்தில் இசைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்துள்ள உரையில் பல இடங்களில் தான் உடன்படவில்லை என்பன போன்ற உப்பு சப்பு இல்லாத காரணங்களை கூறியும் தனது உரையை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டார்.

இதையடுத்து சபாநாயகர் அப்பாவு முழு உரையையும் தமிழில் வாசித்தார். அப்போது ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஆனால் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற அவை மரபை மீறி தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை.

திட்டமிட்டு ஆளுநர் தனது நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிராகவும், அரசியல் மாண்புகளுக்கு புறம்பாகவும் ஆளுநர் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்களும் தலைவர்களும் சாடி வருகின்றனர்.

ஆளுநர் இவ்வாறு நடந்துக்கொள்வது முதல் முறை அல்ல, கடந்த ஆண்டும் ஆளுநர் உரையின் போதும் இதே போல் தான் பொய்யான காரணங்களை குறிப்பிட்டு ஆளுநர் உரையினை வாசிக்காமலே வெளியேறினார்.

ஒவ்வொரு முறையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபையை அவமதிப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களையே மீண்டும் மீண்டும் அவமதித்து வருகிறார் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்து பார்த்திருக்கிறோம், அவர்களின் உரைகளை அவைக்குறிப்பிலிருந்து நீக்கியும் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் முதல் முறையாக ஒரு ஆளுநர் ஒருவரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையில் தகவல் பரிமாற்றம் செய்வதும் ஆலோசனைகளை வழங்குவதும் தான் ஆளுநரின் அடிப்படை பணி.

இனியாவது ஆளுநர், தமிழ்நாட்டின் நலன் கருதியாவது அரசுடன் சுமூக உறவைப் பேண வேண்டும் என்று தான் தமிழ்நாட்டு மக்கள் இன்னமும் எதிர்பார்க்கிறார்கள்.
சட்டப்பேரவையின் மரபுகள் காப்பாற்றப்பட வேண்டும். அப்போது தான் நாட்டில் ஜனநாயகம் தழைக்கும்!

படிக்க வேண்டும்

spot_img