பெரிய நாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பாலு கார்டன் பகுதியில் புதிய வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கான பூமி பூஜை செவ்வாய்க்கிழமை நடந்தது.
கூடலூர் நகராட்சியின் 25 ஆவது வார்டுக்கு உட்பட்ட கேஸ் கம்பெனி அருகே பாலு கார்டன் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நகர் உருவானதிலிருந்து வடிகால் வசதி இல்லை. இப்பகுதிக்கு வடிகால் வசதி வேண்டும் என்று இப்பகுதியினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் நகராட்சி பொது நிதியின் கீழ் ரூ. 9.50 லட்சம் செலவில் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
இதற்கென நடந்த பூமிபூஜைக்கு ஆணையாளர் மனோகரன், துணைத் தலைவர் ரதி ராஜேந்திரன்,வார்டு கவுன்சிலர் சரண்யா சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகராட்சித் தலைவர் அ.அறிவரசு தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் ஜனார்த்தனன், முருகானந்தம் பாலசுப்பிரமணியம், ரமேஷ்,துரை செந்தில் மற்றும் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.