fbpx
Homeதலையங்கம்செல்வப்பெருந்தகையின் தலைமை வெற்றிபெறட்டும்!

செல்வப்பெருந்தகையின் தலைமை வெற்றிபெறட்டும்!

கடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நீண்ட காலம் பதவியில் இருந்தவர்களில் கே.எஸ்.அழகிரியும் ஒருவர். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது.

பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 4 ஆண்டு கடந்துவிட்டது. இதனால் புதிய தலைவரை நியமிக்க டெல்லி தலைமை ஆலோசனை செய்து வந்தது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரின் நியமனம் திமுகவிற்கு இனிப்பான செய்தியாகும். இவர் திமுகவுடன் நட்பாக இருக்க கூடியவர்.

சட்டசபையிலேயே திமுகவுடன் நெருக்கம் காட்டக் கூடியவர். இந்த நிலையில்தான் செல்வப் பெருந்தகை நியமனம் திமுகவிற்கு சாதகமாக மாறி உள்ளது. முக்கியமாக தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தைகளில் செல்வப் பெருந்தகை திமுகவுடன் நட்பாக செல்வார் என்பதில் சந்தேகமில்லை.

இதுவரை தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி தமிழ்நாடு காங்கிரசை இளமைத் துடிப்போடு வழிநடத்தினார் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பாஜகவுக்கு எதிரான அவரது பேட்டிகள், பேச்சுகள், நடவடிக்கைகள் எதற்கும் அஞ்சாதவர் என்பதைப் பறைசாற்றும். அரசியல் நாகரீகத்தில் இருந்து அவர் ஒருபோதும் பிறழ மாட்டார். பல ஆண்டுகள் அப்பொறுப்பில் இருந்து காங்கிரஸ் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பண்பாளர் கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு வாழ்த்துகள்.

அதேபோல, பல ஆண்டு அரசியல் பணி, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைமை முதலிய அனுபவம் உள்ள சமூகநீதிப் போராளியான செல்வப்பெருந்தகைக்குப் பொருத்தமான பதவியை காங்கிரஸ் மேலிடம் அளித்திருப்பது பாராட்டத்தக்கது.

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் சொல்லாண்மை செல்வப்பெருந்தகைக்கு உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், துடிப்பான அவரது அரசியல் பயணம் வெற்றியை நோக்கி நகரட்டும்.

நமது வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img