fbpx
Homeபிற செய்திகள்‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: கோவை மாவட்டத்தில் பயனடைந்த 52,650 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்: கோவை மாவட்டத்தில் பயனடைந்த 52,650 பேர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் பயனடைந்த பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு தங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.
அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்திடவும், “உங்கள் தொகுதியில் முதலமைச்சர் கள ஆய்வில் முதலமைச்சர்” போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன்தொடர்ச்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிடமாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை கோவை மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத் துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 06.01.2024 தேதி வரை ஒவ்வொரு முகாமிற்கும் துணை ஆட்சியர் நிலையில் பொறுப்பு அலுவலரை நியமனம் செய்து மொத்தம் 16 நாட்கள் மாநகராட்சியில் 68 முகாம்கள், நகராட்சியில் 27 முகாம்கள் பேரூராட்சியில் 32 முகாம்கள் மற்றும் நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் – 10 முகாம்கள் என மொத்தம் 137 முகாம்கள் நடத்தப்பட்டது, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் முகாமிலேயே விண்ணப்பித்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்ய அனைத்து முகாம்களிலும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் இ-சேவை மையங்கள் அமைக்கப்பட்டது.
இந்த இ-சேவை மையங்களில் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு 50% பதிவு கட்டணமே வசூலிக்கப்பட்டது. 13 அரசுத்துறைகள் சார்ந்த பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான 19,786 மனுக்களும் இதர கோரிக்கைக்களுக்கான 54,277 மனுக்களும் பெறப்பட்டு, இதற்கென பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் எனும் இணைய வழியில் 74,063 பதிவேற்றம் செய்யப்பட்டது. 74,063 மனுக்களில் 52,650 மனுக்கள் ஏற்கப்பட்டு பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் 02.02.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, 601 பயனாளிகளுக்கு ரூ.11.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, குனியமுத்தூர் ஸ்ரீகிருஷ்ணா கல்லூரியில் 16.02.2024 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 3466 பயனாளிகளுக்கு ரூ.127.06 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்ற கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரெசியா தெரிவித்ததாவது:
நான் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏதாவது உடல்நிலை சரியில்லை, அவசர சிகிச்சை செய்யவேண்டும் என்றால் எங்களிடம் போதிய பொருளதார வசதி இல்லை. இதனால் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை பெறவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எனக்கு காப்பீட்டு அட்டை தொடர்பாக எந்த துறையை அணுகவேண்டும், எவ்வாறு விண்ணப்பிப்பது, என்ன சான்றிதழ்கள் இணைக்கவேண்டும் என்ற விவரங்கள் கூட எனக்கு தெரியவில்லை. இந்நிலையில், எங்கள் பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் நடத்தப்படுவதை அறிந்து, அம்முகாமிற்கு சென்று, மருத்துவக் காப்பீட்டு அட்டை வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தேன்.

இந்நிலையில் மனு பதிவு செய்த 15 நாட்களிலே எனக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டையை வழங்கியுள்ளார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. இந்தகாப்பீட்டு அட்டை எங்கள் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் என தெரிவித்தார்.
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிக்கான இருசக்கர வாகனம் பெற்ற குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சித்ரா தேவி தெரிவித்ததாவது:

நான் குனியமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன். மாற்றுத்திறனாளி ஆன என்னால் மற்றவர்கள் போல் எல்லா இடங்களுக்கு எளிதாக சென்றவரமுடிவதில்லை. நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன்.
நான் தினமும் வேலைக்கு செல்வதற்கு இரண்டு பேருந்துகள் மாறி செல்லவேண்டிஇருந்தது. மாற்றுத்திறனாளியான எனக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதியில் நடைபெற்ற முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் வேண்டி கோரிக்கை மனு அளித்திருந்தேன்.
இந்நிலையில், மனு பதிவு செய்து, 15 நாட்களிலே எனக்கு இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் என்போன்ற மாற்றுத்திறனாளிகளை சென்றுசேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொகுப்பு
ஆ.செந்தில் அண்ணா,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
கி. மோகன்ராஜ்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img