fbpx
Homeதலையங்கம்தமிழர்களை அவமதிக்கும் மோடி சொன்ன வார்த்தை!

தமிழர்களை அவமதிக்கும் மோடி சொன்ன வார்த்தை!

மக்களவை தேர்தலையொட்டி பூரி பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,”பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போய்விட்டது. நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகன்நாதரிடம் முறையிடலாம்.

ஆனால் ஜெகநாதர் கோயில் பொக்கிஷ் அறை சாவியே காணாமல் போய்விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்” என விமர்சித்து இருந்தார்.

ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து தற்போது பிஜு ஜனதா தள் கட்சியின் முக்கிய பிரமுகராக மாறி இருக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மதுரையைச் சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனின் பெயரை தான் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக குறிப்பிட்டார்.

இதேபோல ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பிரசாரத்தின்போது, ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைக்க முடியுமா? ஒடிசாவின் முதல்வராக வரக்கூடியவர், ஒடிசா மண்ணைச் சேர்ந்தவராகவும், ஒடியா மொழி பேசக் கூடியவராகவும் இருக்க வேண்டும் என பேசி பி.கே.பாண்டியனை மறைமுகமாகச் சாடினார்.

இதற்கிடையே மோடியின் பேச்சு தமிழர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதுதொடர்பான பதிவில்,”ஒடிசா மாநிலத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் தொலைந்துபோன சாவிகள் தமிழ்நாட்டில் இருப்பதாகப் பேசி இருக்கிறார்.

இது, கோடிக்கணக்கான மக்களால் வணங்கப்படும் புரி ஜெகந்நாதரை அவமதிப்பதோடு, ஒடிசா மாநிலத்தோடு நல்லுறவும் நேசமும் கொண்ட தமிழ்நாட்டு மக்களை அவமதிப்பதும் புண்படுத்துவதுமாகும்.

ஜெகந்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களைத் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகத் தூண்டும் பேச்சல்லவா இது? ஆலயத்தின் பொக்கிஷத்தைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்கள் மீது பிரதமர் மோடி சுமத்தலாமா? தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?” என கூறியிருந்தார்.

ஒரு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், இந்தியாவின் பிற மாநிலங்களில் குடியேறி அரசியலில் பிரபலமாகக் கூடாதா? எத்தனையோ பேர் அப்படி பிரபலமாகி அதிகாரத்திலும் உயர்ந்திருக்கிறார்கள்; அரசியலிலும் உயர்ந்திருக்கிறார்கள்.

ஏன், பிற மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவரை முதலமைச்சர் கட்டிலில் அமர்த்தி அழகு பார்த்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். நாம் அனைவரும் இந்தியர்கள் என்பதை தமிழர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அப்படியிருக்க, பீகாரில் இருக்கும் தமிழர் ஒருவரை விமர்சிக்கலாம். அது அரசியல் விமர்சனமாக மட்டுமே இருக்க வேண்டும். அதை விடுத்து ஒட்டுமொத்த தமிழர்களை திருடர்கள் என்பது போல சித்தரித்து பேசுவது எந்த விதத்திலும் நியாயமல்ல.

அதுவும் பிரதமரே அப்படிப் பேசுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லதல்ல. அதேபோல அமித்ஷாவும், ஒடிசாக் காரர் தான் ஒடிசாவை ஆள வேண்டும் என பேசியதோடு நிறுத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டை குறிப்பிட்டு அவர் பேசி இருக்கக்கூடாது.

அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் என இப்படிப்பட்ட சர்ச்சை பேச்சுகளை கடந்து செல்ல முடியாது. யாராக இருந்தாலும் அதிலும் நாட்டின் பிரதான பதவிகளில் இருப்பவர்கள் நாவடக்கத்தோடு பேச வேண்டும் என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் இடித்துரைக்கின்றன.

பலதரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தநிலையில், பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் ஏதேனும் ஒரு விளக்கத்தைத் தெரிவித்து நிலைமையைச் சமப்படுத்தி இருக்கலாம்!

படிக்க வேண்டும்

spot_img