fbpx
Homeதலையங்கம்மத நல்லிணக்கத்திற்கு முன்னோடி தமிழ்நாடு!

மத நல்லிணக்கத்திற்கு முன்னோடி தமிழ்நாடு!

இந்தியாவில் இருக்கும் மாநிலங்களில் மத நல்லிணக்கத்திற்கும் சகோதரத் துவத்திற்கும், சமூக நீதிக்கும் முன்னோடியாக திகழும் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு.

கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் எந்தவித போட்டி பொறாமையின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் பிற மத நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் வழக்கம். திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் ஸ்ரீ சக்தி சந்தான கணேசர் திருக்கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா சமீபத்தில் நடந்தது. இதில் இஸ்லாமிய பெருமக்கள், மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகளை அளித்தனர். பூமாலை, வளையல், பட்டுச்சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர் தட்டு கொண்ட சீர்வரிசையை அளித்தனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் குடும்ப நிகழ்ச்சிகளிலும் இரு தரப்பை சேர்ந்தவர்களும் குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கும் சீர்கொண்டு வந்ததாக கூறுகின்றனர் இஸ்லாமியர்கள். மேலும் இஸ்லாமியர்கள் இந்துக்கள் நாங்கள் என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது. சகோதரர்கள் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அதன் காரணமாகத்தான் நாங்கள் உரிமையுடன் சீரை கேட்டு பெற்று இருக்கிறோம் என்கின்றனர் அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள்.

இதேபோல மதநல்லிணக்கத்தை பறைசாற்றும் இன்னொரு ஒரு அற்புதமான, நெகிழ்ச்சியான நிகழ்வு அரங்கேறி இருக்கிறது. அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே உள்ளது நடுவலூர் கிராமம். இங்குள்ள விநாயகர், மாரியம்மன், அய்யனார், ஐயப்பன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களின் குட முழுக்கு விழாவிற்கு கிறிஸ்தவ பாதிரியார்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி நடுவலூர் புனித சூசையப்பர் ஆலய பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகியோர் கோயில் கோபுரத்தின் உச்சிக்கே சென்று குடமுழுக்கில் கலந்து கொண்டதுடன், மற்ற மதத்தைச் சேர்ந்த கடவுளாக இருந்தாலும், கைகூப்பி வணங்கி நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்து கொண்டனர். முன்னதாக, குடமுழுக்கில் கலந்து கொள்ள வந்த பாதிரியார்கள் ராபர்ட் மற்றும் ஜோசப் தன்ராஜ் ஆகியோருக்கு கிராமமே திரண்டு உற்சாக வர வேற்பு அளித்துள்ளது. குடமுழுக்கின் நிறைவிலும் பாதிரியார்களுக்கு ஊர்ப் பொதுமக்கள் சார்பில் சிறப்பு செய்யப்பட்டுள்ளது.

மத நல்லிணக்கத்திற்கு உதாரணமான நடுவலூர் மக்களின் இந்த செயல் சமூக வலைதளவாசிகளின் வாழ்த்தையும், பாராட்டையும் பெற்று வைரலாகி வருகிறது.
‘இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம்’ என்ற பொன் மொழிக்கு ஏற்றவாறு, மதத்தால் பிரிந்த போதும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நம்முடைய பண்பாடாக இருந்து வருகிறது.
மதநல்லிணக்கம் ஓங்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img