fbpx
Homeபிற செய்திகள்திருவள்ளுவரின் மாண்பை குறைக்கும் காவிச்சாயம்!

திருவள்ளுவரின் மாண்பை குறைக்கும் காவிச்சாயம்!

கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, காவி உடையில் இருக்கும் திருவள்ளுவரின் நிழற்படத்தை வெளியிட்டு திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்த நிலையில், பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில், தற்போது மீண்டும் அத்தகைய சர்ச்சை எழுந்துள்ளது.

திருவள்ளுவர் திருநாள் விழா என்ற பெயரில் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் புகைப்படத்தை இடம்பெறச் செய்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார், ஆளுநர் ஆர்.என்.ரவி. கடும் எதிர்ப்பு வெடிக்கும் என்று தெரிந்திருந்தும் அதைச் செய்கிறார்.

இதற்கு பல்வேறு அமைப்புகளும், பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு பயன்படுத்தும் படங்களில் திருவள் ளுவர் வெள்ளை நிற ஆடை அணிந்தவாறு இடம் பெற்று இருக்கும்.

அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்திற்கு ஆளுநர் காவி சாயம் பூசலாமா? தமிழ்நாட்டு அரசின் இலச்சினைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டு அரசின் அறிவிப்புப் போல் ஆளுநராக இருந்து கொண்டு கருத்தறிவிப்பது எந்த வகையில் நியாயம்?

ஆர்.என்.ரவி, தான் ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட கடந்த 2021 தொடங்கி திருவள்ளுவரை எப்படியாவது காவிக்குள் அடக்கி விட வேண்டும் என்பதற்காக எண்ணற்ற புனைவுகளையும் தொடர்ந்து பேசி வருவதைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமின்றி உலகமெங்கும் பரவி இருக்கிற தமிழர்களும் அறிவார்கள்.

திருவள்ளுவர் இந்துவா, சமணரா? என்ற வாதமே தேவையற்றது. ஒரு வாதத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்வது போல திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால் அவர் தந்துச் சென்ற திருக்குறளில் கடவுள், மதம் என்ற சொற்கள் உண்டா? இல்லையே. சிந்தனைக்கும், அறிவுக்கும் முதலிடம் கொடுத்திருப்பதால் தான் திருக்குறள் உலகப்பொதுமறையாகப் போற்றப்படுகிறது. கிட்டத்தட்ட உலகின் முக்கிய மொழிகள் அனைத்திலும் மொழிபெயர்ப்புச் செய்துபட்டு, உலகில் உள்ள அனைத்து மத மக்களுமே கொண்டாடி வருகின்றனர்.

அப்படி இருக்க, மதச்சாயம் பூசி திருவள்ளுவர் ஓர் இந்து என நிலைநாட்டும் முயற்சி தேவையற்றது. அப்படிச் செய்வது உலக அரங்கில் திருவள்ளுவரின் மாண்பை குறைக்குமே தவிர வேறல்ல.

அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மைக்கும் இது எதிரானது.
திருவள்ளுவரை ஒரு வாதப்பொருளாக மாற்றி இருப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயலே தவிர வேறென்ன?

படிக்க வேண்டும்

spot_img