fbpx
Homeதலையங்கம்குண்டர் தடுப்புச் சட்டம் தினம் தினம் பாயட்டும்!

குண்டர் தடுப்புச் சட்டம் தினம் தினம் பாயட்டும்!

சட்ட விரோதமாக மது தயாரிப்பது, விற்பனை செய்வது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் காரியங்களைச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, கடத்தல்களில் ஈடுபடுவது, வழிப்பறியில் ஈடுபடுவது போன்ற கடுமையான குற்றங்கள் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும், கடுமையான தண்டனைகளை வழங்கவும் குண்டர் தடுப்புச் சட்டம் 1982ல் தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்டது.

கடுமையான குற்றங்கள் எதையாவது செய்யக்கூடியவர் அல்லது செய்யக்கூடிய குழுவைச் சேர்ந்தவர் என்று கருதினாலே அவர்களை இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். நகர்ப்புறங்களில் காவல் துறை ஆணையரும், ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியரும் இந்தச் சட்டத்தை செயல்படுத்த அதிகாரம் கொண்டவர்கள்.

இந்த சட்டத்தின்படி ஒருவர் கைது செய்யப்பட்டால், அவரை 12 மாதங்கள் தொடர்ந்து சிறையில் அடைக்க முடியும். அவரிடம் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லை. ஜாமீனும் வழங்கப்படாது.
குற்றங்களைத் தடுக்க குண்டர் தடுப்புச் சட்டத்தை அவ்வப்போது கையிலெடுத்த காவல்துறை, இப்போது அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் இந்த சாட்டையை கையிலெடுத்துச் சுழற்றத் தொடங்கி இருக்கிறார். சென்னையில் மட்டும் கடந்த ஜனவரி 1 முதல் மே 26 ஆம் தேதி வரை மொத்தம் 585 குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள னர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 89 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பெண்களும் உண்டு.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலான குற்றங்கள் அதிகம் நடைபெறாமல் தடுக்க வழக்கமான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்தாலும் தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்க குண்டர் தடுப்புச் சட்டம் பெரிதும் துணை புரிகிறது.
சென்னையைப் போல பிற மாநகரங்களிலும் மாவட்டங்களிலும் குற்றம் செய்யவே அச்சப்பட வைக்கும் வகையில் பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டம் பாயட்டும்.
குண்டர்கள் வரவுக்காக சிறைச்சாலை கதவுகள் தினம் தினம் திறந்து மூடட்டும்!

படிக்க வேண்டும்

spot_img