fbpx
Homeதலையங்கம்பத்தாண்டுகளுக்குப் பிறகு எழுச்சிபெற்ற காங்கிரஸ்!

பத்தாண்டுகளுக்குப் பிறகு எழுச்சிபெற்ற காங்கிரஸ்!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 காலையில் வெளிவரத் தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.
2019 தேர்தலில் வென்ற 303 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட பாஜக 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றியைப் பதிவு செய்தது.
எதிர்த்திசையில் கடந்த தேர்தல்களில் பெற்றதை விட காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் அதாவது 99 தொகுதிகளில் வெற்றி பெற்றதைக் காணமுடிந்தது. தற்போது ஒரு சுயேச்சை எம்பி காங்கிரசில் சேர்ந்துள்ளதால் அதன் பலம 100 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, 2014 தேர்தல் தொடங்கி இந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இந்தத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்கத்தை எட்டிப்பிடித்து முன்னேறி இருக்கிறது.
மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 2014 தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

ஐந்தாண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரிய வித்தியாசம் எதுவும் அந்தக் கட்சியிடம் காணப்படவில்லை. அந்தத் தேர்தலில் அக்கட்சி 52 தொகுதிகளில் வென்றது.
ஆயினும், இம்முறை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 100ஐ தொகுதிகளை காங்கிரஸ் தன்வசப்படுத்தி உள்ளது. காங்கிரசின் இந்த திடீர் எழுச்சி, பாஜக மற்றும் அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும் காங்கிரஸ் மட்டும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்தது.

காங்கிரஸ் மீண்டெழுந்ததற்கு காரணம் இந்தியா முழுவதும் ராகுல் காந்தி கடந்த ஆண்டு நடத்திய நடைப்பயணமா?
2019 தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்திக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை மக்கள் ஏற்கவில்லையா?
முதல்வர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டுமே குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, ஐடி கைது செய்ததை வாக்காளர் பெருமக்கள் ஏற்க வில்லையா-?
ஊழல், முறைகேட்டில் சிக்கி பாஜகவில் இணைந்தவர்கள் மீது மட்டும் மோடி அரசு நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் புனிதர்களாகி விட்டனர் என்று அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளித்ததை மக்கள் ஏற்கவில்லையா?

பிரசாரத்தின்போது மகாத்மா காந்தி உள்ளிட்ட மறைந்த தேசத் தலைவர்களை மோடி தேவையின்றி விமர்சித்ததையும் மத அடிப்படையிலான பிரசாரத்தை முன்னெடுத்ததையும் மக்கள் விரும்ப வில்லையா?
இப்படி பல கேள்விகளை தங்களுக்கு தாங்களே எழுப்பி, அவற்றுக்கு வாக்குகள் மூலம் பொதுமக்கள் அளித்த விடையால் தான் காங்கிரஸ் கட்சி தோற்றிருந்தாலும் மீண்டும் எழுச்சியுடன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது என்றால் மிகையன்று.

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சி வலுவாக இருந்தால் தான் ஜனநாயகம் தழைக்கும். ஆளுங்கட்சி எல்லை மீறிச்செல்லும்போது அதற்கு கடிவாளம் போடும் ஆற்றல் வலுவான எதிர்க் கட்சிக்கு மட்டுமே கிடைக்கும்.
அது இந்த தேர்தலில் காங்கிரசுக்கு கிடைத்திருக்கிறது.
இதுவே காங்கிரசுக்கு பெரிய வெற்றி தான்!

படிக்க வேண்டும்

spot_img