fbpx
Homeதலையங்கம்ராகுல் மைக் இணைப்பை துண்டித்தது யாரோ?

ராகுல் மைக் இணைப்பை துண்டித்தது யாரோ?

18ஆவது மக்களவை கூட்டத்தில் கடந்த புதனன்று மக்களவையில் திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த காந்தி உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பிய போது மைக் அணைக்கப்பட்டது. மைக் அணைக்கப்பட்டாலும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். இந்நிகழ்வுக்கு இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில், நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதும் மக்களவையில் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. `நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என கருதுகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து சொல்ல வேண்டும்.

மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும்` என அவர் பேசிக் கொண்டிருந்தபோது மைக் இணைப்பு இல்லாமல் போனது. ராகுல் பேசிக் கொண்டிருந்தபோதே மைக் இணைப்பை துண்டித்ததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்தார். அதில், ”நாடாளுமன்ற உறுப்பினர்களின் மைக்கை இயக்கும், அணைக்கும் பொத்தான் தன்னிடம் இல்லை. அப்படியான கட்டுப்பாடு வசதியும் இல்லை. விவாதம் குடியரசுத் தலைவர் உரை மீதே இருக்க வேண்டும். மற்ற விஷயங்கள் அவையில் பதிவு செய்யப்படாது” என்று மழுப்பலாகக் கூறினார்.

மைக் அணைப்பில் தனக்கு தொடர்பு இல்லை என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி விட்டார். அப்படியானால் யாரிடம் “மைக் ரிமோட் கன்ட்ரோல்” உள்ளது?
இதேபோல நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை விவாதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஒத்தி வைப்பு தீர்மானத்தை மக்களவை இணையதளத்தில் சமர்ப்பிக்க வியாழனன்று இரவு இண்டியா கூட்டணி ஆயத்தமாகியது.
ஆனால் மக்களவை இணைய தளத்தில் சமர்ப்பிக்கும் விருப்பம் முடக்கப்பட்டு இருந்தது. இதனால் ஒத்திவைப்பு தீர்மானத்தை மக்களவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது.

ஆனாலும் எம்பிக்கள் கைப்பட எழுதி மக்களவை செயலகத்தில் ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்தனர் என்பது வேறு விஷயம். வேண்டுமென்றே இணையதளம் முடக்கப்பட்டதாக இண்டியா கூட்டணி குற்றம்சுமத்தி உள்ளது.
ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இணையம் தானாக முடங்கி இருந்தால்… டிஜிட்டல் இந்தியாவிற்கே இந்த நிலையா? என்று வியக்கத் தோன்றும்.

இந்த கேள்விகளுக்கான விடைகள் நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா? நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தான் விளக்கம் அளிக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img