fbpx
Homeபிற செய்திகள்சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடந்த சனிக்கிழமை அன்று கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பேரணியும், விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியும் நடத்தின. காலை 7 மணியளவில் ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் இருந்து பேரணியானது தொடங்கி நிர்மலா மகளிர் கல்லூரியின் கலையரங்கத்தை வந்தடைந்தது.

இப்பேரணியில் மூன்று கல்லூரி மாணவர்கள் மொத்தம் 225 பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பதாகைகளைக் கைகளில் ஏந்திச் சாலை வழியாக நிர்மலா மகளிர் கல்லூரியை வந்தடைந்தனர். மேலும் விடே (Vitae) எனும் பன்னாட்டுத் தனியார் நிறுவனத்தைச் சார்ந்த 40 பேர் கலந்து கொண்டனர்.

நிர்மலா மகளிர் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி முனைவர் குழந்தைதெரேஸ், முதல்வர் அருள் சகோதரி முனைவர் மேரி பபியோலா, விடே அமைப்பின் நிர்வாக இயக்குனர் டேனியல் விக்டர், அவரது மனைவி லதா டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வருகை புரிந்தோரை நிர்மலா மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறையின் உதவிப்பேராசிரியரான முனைவர் கற்பகம் வரவேற்றார். விடே அமைப்பிலிருந்து வருகை புரிந்த மூத்த தணிக்கை அலுவலர் கிரிஜா வாழ்த்துரை வழங்கினார்.

நிலையான எதிர்காலம் நம் கையில் உள்ளது, சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும், அதற்கான முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் தம் பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்பன போன்ற கருத்தை முன் வைத்தார். விலங்கியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் தனலட்சுமி சுற்றுச்சூழல் பாதுகாப்பின் இன்றியமையாமை குறித்து எடுத்துரைத்தார்.

வருகை புரிந்தோர் அனைவருக்கும் விலங்கியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் விக்னேஷ் பிரியா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நிர்மலா மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர்களான முனைவர் தனலட்சுமி, முனைவர் கற்பகம் ஆகியோரும், ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் விக்னேஷ் பிரியா, முனைவர் மெர்சி ஆகியோரும் சிறப்பாகச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img