fbpx
Homeதலையங்கம்கள்ளச்சாராயம் ஒழிக்க கண்காணிப்பு குழுக்கள்!

கள்ளச்சாராயம் ஒழிக்க கண்காணிப்பு குழுக்கள்!

கள்ளக்குறிச்சி நகரில் ஜூன் 18-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 21 பேரை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை அடியோடு ஒழிக்கும் விதமான நடவடிக்கைகளை புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் முடுக்கி விட்டுள்ளார்.

சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க 562 கிராம அளவிலான கண்காணிப்பு குழுக்களை அவர் அமைத்து அதிரடி காட்டியுள்ளார்.

கிராம நிர்வாக அலுவலரை தலைவராகக் கொண்ட அக்குழுவில் கிராம உதவியாளர், ஊராட்சி அளவிலான மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர், கிராமத்தின் ரோந்து பணி காவலர் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், பதுக்கி வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்துதல் ஆகியவற்றைக் கண்டறிந்து அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது காவல்துறை மூலம் உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கள்ளச்சாராய குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினருக்கு எந்த நிர்ப்பந்தமும் இருக்க கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால் தான் கள்ளக்குறிச்சி சம்பவம் போல மீண்டும் நடக்காமல் தடுக்க முடியும்.

அதே நேரத்தில் குழுக்களின் செயல்பாடுகளில் எந்த சுணக்கமும் ஏற்படாதவாறு தொடர் நடவடிக்கை இருக்க வேண்டும். மேலும் குழுவினர் அச்சமின்றி செயல்படுவதற்கான பாதுகாப்பான சூழலை அமைத்துத் தர வேண்டியதும் அரசின் கடமை ஆகும்.

65 உயிர்களை பலிகொடுத்த பிறகே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த சீரிய முயற்சியை முன்னெடுத்த மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் பாராட்டுக்குரியவர்.

கள்ளக்குறிச்சி போல தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் அனைத்திலும் உடனடியாகக் கண்காணிப்பு குழுக்களை அமைத்தும் காவல்துறை மூலம் அதிகளவில் சோதனைகள் நடத்தியும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனையை முடக்க வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img