fbpx
Homeபிற செய்திகள்குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானைகள்

மேட்டுப்பாளையம்,சிறுமுகை வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானை, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் இருந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரைத்தேடி வனப்பகுதியின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடம்பெயர்வதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில் சமீப காலமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி,கோத்தகிரி செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.குறிப்பாக மாலை வேளைகளில் யானைகள் கூட்டமாக சாலையை கடப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி சாலையில் வனக்கல்லூரி அருகே குட்டிகளுடன் காட்டு யானைகள் கூட்டமாக இருப்பதைக்கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் யானை விரட்டும் வாகனம் மூலமாக சுமார் அரை மணி நேரம் போராடி குட்டிகளுடன் கூட்டமாக நின்றிருந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட்டு தங்களது வாகனங்களை இயக்கிச்சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்றுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் சமீப காலமாக ஊட்டி,கோத்தகிரி செல்லும் சாலைகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.குறிப்பாக மாலை வேளைகளில் யானைகள் கூட்டமாக சாலையை கடந்து செல்கின்றன.

இவ்வாறு சாலைகளில் காட்டு யானைகள் நிற்பதை கண்டால் வாகன ஓட்டிகள் அதனை தனியாகவோ,கூட்டு சேர்ந்தோ விரட்ட முயலக்கூடாது.சப்தமிடக்கூடாது. அவ்வாறு விரட்ட முற்படும் போது காட்டு யானைகள் மனிதர்களை தாக்க வாய்ப்புகள் அதிகம். எனவே,இவ்வாறு செய்யக்கூடாது.

அதேபோல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் மிதமான வேகத்தில் பயணிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img