fbpx
Homeதலையங்கம்டெல்லியில் ஓங்கி ஒலித்த சபாநாயகர் அப்பாவு குரல்!

டெல்லியில் ஓங்கி ஒலித்த சபாநாயகர் அப்பாவு குரல்!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பின் இந்திய பிராந்திய 10வது கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவின் உரை இந்திய அளவில் கவனம் பெற்றுள்ளது.

அவரது பேச்சின் சாராம்சம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில மசோதாக்கள், காரணமின்றி, பல ஆண்டுகளாக ஆளுநர் அலுவலகத்தில் முடங்கிக் கிடப்பதால், மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல், அவர்களின் அதிருப்திக்கு ஆளாகின்றனர். சட்டப்பேரவையை அவமதிப்பது என்பது அதன் உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேற்றப்பட்ட சூழ்நிலையிலும், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்கள் ஓரிரு மணி நேரத்தில் தனது ஒப்புதலை வழங்குகிறார். ஆனால் சில மாநிலங்களில், அம்மாநில சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கூட, மாண்புமிகு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதில்லை.

அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் எந்தக் காரணமும் கூறாமல் நிறுத்தி வைக்கிறார். இதனால் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர், மேலும் நிறுத்தி வைப்பதற்கான காரணம் கூறப்படாததால், சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியாத நிலை உள்ளது.

இவ்வாறாக மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான தேவையற்ற மோதல் பிரச்னையை புட்டுபுட்டு வைத்த சபாநாயகர் அப்பாவு அதற்கான தீர்வையும் தனது உரையில் தெளிவாக எடுத்துரைத்தார். அதாவது தங்களுக்கு இல்லாத அதிகாரங்கள் இருப்பதாகக் கருதி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு எதிராக ஆளுநர்கள் செயல்படும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்பதே அவரது யோசனை; இடித்துரை.

மாநில ஆளுநர்கள் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதன் மூலம் அரசியலமைப்பு விதிகளை நிலைநிறுத்தும் வகையில் ஒரு அமைப்புமுறை உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும் என்றும் சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்குமாக குரலெழுப்பி இருக்கிறார்.

ஜனநாயகம் என்கிற கோட்டையை உருக்குலையாமல் காப்பதற்காக அமைக்கப்பட்டது தான் காமன்வெல்த் பார்லிமென்ட் கூட்டமைப்பு. இத்தகைய சிறப்பு வாய்ந்த அதன் கூட்டத்தில் சபாநாயகர்களால் சொல்லப்படும் கருத்துகளை ஆய்ந்து செயல்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுதான் ஜனநாயக நாட்டுக்கு நல்லது. அப்போது தான் அரசின் திட்டங்கள் தடையின்றி மக்களைப் போய்ச் சேரும். இதற்கு எந்த விதத்தில் தடைகள் வந்தாலும் அவற்றை உடைத்தெறிய வேண்டியது ஜனநாயக கடமை.

அந்த வகையில், டெல்லியில் ஓங்கி ஒலித்துள்ள அப்பாவுவின் குரல், செவிடன் காதில் ஊதிய சங்காக அடங்கிப் போய்விடாமல் கேட்க வேண்டியவர்களுக்கு கேட்கட்டும்!

படிக்க வேண்டும்

spot_img