fbpx
Homeபிற செய்திகள்ஸ்டாலினுக்கு “பச்சைக்கொடி” காட்டுவாரா பிரதமர் மோடி?

ஸ்டாலினுக்கு “பச்சைக்கொடி” காட்டுவாரா பிரதமர் மோடி?

இன்றைய தினம் (26ம் தேதி) மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். திமுகவின் பவளவிழா கொண்டாட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின், தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்திலும், பிரதமரை இன்றைய தினம் சந்திக்க டெல்லி செல்லவிருப்பதாக பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்றிட ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியை வலியுறுத்திப் பெறவிருக்கிறேன் என்றும் அந்த கடிதத்தில் மேலும் தெரிவித்திருந்தார்.

அதன்படி. நாளைய தினம் (27ம் தேதி) காலை 11 மணிக்கு பிரதமர் மோடியைச் சந்தித்து பேசுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது, தமிழ்நாட்டு நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்படி வலியுறுத்துவதே அவரது பிரதான கோரிக்கையாக இருக்கும்.

குறிப்பாக, சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்த உள்ளார்.

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைப்பதையும் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கும் போக்கையும் தடுக்க வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என்பதிலும் சந்தேகமில்லை. சந்திப்பின்போது விரிவான கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமரிடம் வழங்க உள்ளார்.

ஏற்கனவே, தமிழ்நாட்டை புயல், வெள்ளம் புரட்டிப்போட்டபோது பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்குமாறு வேண்டினார். வழக்கமாக ஒதுக்கித்தர வேண்டிய சிறிய தொகையை அதாவது 492 கோடி ரூபாயை மட்டுமே தந்து விட்டு ஓரம்கட்டியது மத்திய அரசு.

அதுபோல இல்லாமல், இம்முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார் என்ற நம்பிக்யையோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு இன்று பயணப்படுகிறார்.

அவர் முன்வைக்கும் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்புடன் தங்கள் பிரதிநிதியாக முதல்வரை டெல்லிக்கு அனுப்புகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

பச்சைக் கொடி காட்டுவாரா, பிரதமர் மோடி?

படிக்க வேண்டும்

spot_img