fbpx
Homeதலையங்கம்சாலைக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றி!

சாலைக்கு எஸ்.பி.பி. பெயர் சூட்டிய முதல்வருக்கு நன்றி!

இந்திய திரை உலகின் நீங்கா குரலாக விளங்கியவர்களில் ஒருவர் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகெங்கிலும் ரசிகர்களின் மனதில் இன்றும் குடியிருந்து வருகிறார். “இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்…” என்ற பாடலுக்கு உண்மையான சொந்தக்காரர் என்றே எஸ்.பி.பி-யை கூறலாம்.

இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் (2020) கொரோனா தொற்று நோயால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த நிலையில், அதிலிருந்து மீண்ட பிறகு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு இந்திய திரையுலகில் பெரிய இழப்பாகவே பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பி. வாழ்ந்த காம்தார் நகரை, ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் எஸ்.பி.பி.சரண், தமிழக முதலமைச்சருக்கு மனு அளித்திருந்தார்.

மனு கொடுத்த 36 மணி நேரத்தில் அவரது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எஸ்.பி.பி-யின் நினைவு தினத்தன்று (செப்.25) காம்தார் நகர் பிரதான சாலைக்கு ‘எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை’ எனப் பெயர் சூட்டப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு இசை அமைப்பாளர் இளையராஜா, கமலஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகனான சரண், முதலமைச்சருக்கு வீடியோ வெளியிட்டு தன் குடும்பத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த உத்தரவால் எஸ்.பி.பி.யின் பெயர் இனி தினமும் பலரால் உச்சரிக்கப்படுவதன் மூலம் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்பதற்கு உறுதுணையாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை.
இசை நிலா எஸ்.பி.பி. நினைவை மனதில் ஏந்தி போற்றுவதோடு சாலைக்கு அவரது பெயரைச் சூட்டி மரியாதை செய்த முதலமைச்சரையும் பாராட்டி நன்றி சொல்வோம்!

படிக்க வேண்டும்

spot_img