fbpx
Homeபிற செய்திகள்தேக்கம்பட்டி மகளிர் விடுதி அருகே உலா வந்த ஒற்றை காட்டு யானை: வாகன ஓட்டிகள், பக்தர்கள்...

தேக்கம்பட்டி மகளிர் விடுதி அருகே உலா வந்த ஒற்றை காட்டு யானை: வாகன ஓட்டிகள், பக்தர்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தேக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர், வெல்ஸ்புரம், சமயபுரம், தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

இதனால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களில் பயிர்களை சேதம் செய்து வருவதோடு, மனிதர்களையும் அவ்வப்போது அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை இப்பகுதிகளில் முகாமிட்டு பயிர்களை சேதம் செய்து வந்த நிலையில் தற்போது அந்த யானை சிறுமுகை வனப்பகுதிக்கு சென்று விட்டது.

இந்த நிலையில் நேற்றிரவு 9.30 மணியளவில் தேக்கம்பட்டி – வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மகளிர் விடுதி அருகே ஒற்றை காட்டு யானை உலா வந்தது.

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு காத்திருந்தனர். சற்று நேரத்தில் ஒற்றை யானை தானாக மகளிர் விடுதியை ஒட்டியுள்ள விளைநிலம் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்து தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள், பக்தர்கள்,வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்வர்.இதனால் இச்சாலையில் வாகன போக்குவரத்து என்பது எப்போதுமே இருந்து கொண்டிருக்கும். இந்த நிலையில் நேற்றிரவு ஒற்றை யானை சாலையில் உலா வந்துள்ளது.

எப்போதுமே தேக்கம்பட்டி – வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் இந்த நேரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் என்பது அரிதாகவே இருக்கும்.தற்போது யானை நடமாட்டம் தென்பட்டுள்ளது. இதனால் எங்களுக்கு அச்சமாக உள்ளது.

எனவே, வனத்துறையினர் தங்களது ரோந்துப்பணியினை தீவிர படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img