fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலையில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி: மகளிர் சுய உதவிக் குழு பினாயில் தயாரிப்பை ஆய்வு செய்த...

திருவண்ணாமலையில் நிறைந்தது மனம் நிகழ்ச்சி: மகளிர் சுய உதவிக் குழு பினாயில் தயாரிப்பை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேற்று நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டத்தின் சார்பாக தீபம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பினாயில் தயாரிக்கப்படுவதை செய்தியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தமிழகத்தில் ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கங்களின் கீழ் 4.73 லட்சம் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 14.91 லட்சம் உறுப்பினர்களை கொண்ட 1.25 லட்சம் புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வங்கி கடன் இணைப்பு இலக்காக ரூ.35 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு மகளிரைக் கொண்டு சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்கத் தேவையான வங்கிக் கடன் இணைப்புகள் ஏற்படுத்தி சுய உதவிக் குழு இயக்கத்தை வலுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மகளிரை உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்படும் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, முறையான பயிற்சி மற்றும் கூட்டமைப்புகள் மூலம் வங்கிகளுடன் நிதி இணைப்பு ஏற்படுத்தி வருமானம் ஈட்டும் தொழில்களில் ஈடுபட்டு சமூக, பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளனர். தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழு ஏற்படுத்தவும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களைக் கொண்டும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 3 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.92 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு பல்வேறு கடனுதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சியில் தீபம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பினாயில் தயாரிக்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்து வருகிறார்கள். கிராமப்புறங்களில் உள்ள மகளிரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் ஊசாம்பாடி ஊராட்சியில் தீபம் மகளிர் சுய உதவி குழுவைச் சார்ந்த 15 மகளிர்கள் இணைந்து மகளிர் திட்டத்தின் மூலம் சமுதாய முதலீட்டு மற்றும் வங்கி கடன் இணைப்பு மூலமாக ரூபாய் 130000 கடன் பெற்று பினாயில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மகளிர் சுய உதவிக்குழு மூலமாக தயாரிக்கப்படும் பினாயில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், ஊசாம்பாடி ஊராட்சியில் தீபம் மகளிர் சுய உதவிக்குழுவினர் மன நிறைவுடன் தெரிவித்ததாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களாகிய எங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கி கடனுதவிகள் வழங்கப்படுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் வளர்ச்சியில் அதீத கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன்மூலம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களாக இணைந்து ரூபாய் 1,30,000 கடனுதவிகள் பெற்று பினாயில் உற்பத்தி செய்து வருகிறோம். பினாயில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிக இன்றியமையாத ஒன்றாகும். இத்தொழில் மூலம் எங்களுக்கு மாதந்தோறும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. மற்ற குழு உறுப்பினர்களுக்கும் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம். எங்கள் குழு மூலம் மாதம் 2000 ஆயிரம் லிட்டர் பினாயில் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். இதனை 20 ஆயிரம் லிட்டர் தயாரித்து விற்பனை செய்யும் அளவிற்கு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு விற்பனை செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் எங்களது பொருளாதார தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருமானம் கிடைக்கப்பெற்று பயனடைந்து வருகிறோம். இத்தொழில் வாய்ப்பினை எங்களுக்கு ஏற்படுத்தி கொடுத்து எங்கள் வாழ்வாதாரம் உயர்வதற்கு கடனுதவிகள் ஏற்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை எங்கள் குழுவின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) டாக்டர் மணி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சரண்யா தேவி, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img