fbpx
Homeதலையங்கம்மெட்ரோ பணிக்கு நிதி -பிரதமர் மோடிக்கு நன்றி!

மெட்ரோ பணிக்கு நிதி -பிரதமர் மோடிக்கு நன்றி!

இந்தியாவிலேயே அதிக போக்குவரத்து கொண்ட நகரங்களில் ஒன்றாகச் சென்னை இருக்கிறது. பொது போக்குவரத்தை வலுப்படுத்தி நெரிசலைக் குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மெட்ரோ முதல் கட்டத்திற்கு 50% நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தமிழ்நாடு அரசு மீதமுள்ள 50% தொகையை ஒதுக்கியது. திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு சென்னையில் இப்போது 2 ரூட்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் பயணிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

ஆனால், மாதவரம் காலனி- சிறுசேரி, பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம் காலனி- சோழிங்கநல்லூர் என 3 ரூட்களில் 116 கிமீ தூரத்திற்கான மெட்ரோ 2ம் கட்டத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்காமல் இழுத்தடித்து வந்தது.
இதனிடையே இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் தந்தது. ஆனால் மத்திய அரசு இதிலும் வழக்கம்போல பாராமுகம் காட்டி வந்தது. இருப்பினும் பணிகளில் தொய்வு இருக்கக்கூடாது என்பதால் ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திருக்காமல் தமிழ்நாடு அரசே நிதி ஒதுக்கியது. பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடே ஒருமுகமாக மத்திய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்னெடுத்தபோதிலும் செவிடன் காதில் சங்கு ஊதிய… கதையாக மத்திய அரசு செவி சாய்க்காமல் இருந்து வந்தது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் என்பது தமிழ்நாடு அரசின் திட்டமாகவே செயல்படுத்தப்படுவதால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என்றே பதிலாக வந்தது. இது தொடர்பாகச் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும் நேரடியாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்திருந்தார். பாஜக தலைவர் அண்ணாமலை கூட, மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தச் சூழலில் தான் ரூ.63,246 கோடி மதிப்பிலான சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கிடையே நிதி வழங்க ஒப்புதல் அளித்தற்காகப் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கித் தருமாறு நாமும் எடுத்துரைத்து பிரதமரின் கடைக்கண் பார்வை தமிழகத்தின் மீது பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பிய கோரிக்கை பேரொலி, டெல்லியில் முழக்கமாக எதிரொலித்து விடியலைப் பெற்றுத் தந்திருக்கிறது; கோரிக்கை நிறைவேறி விட்டது.
இனியும் யாரையும் குறைகூறிக் கொண்டிராமல் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாராட்டுவோம்!

படிக்க வேண்டும்

spot_img