fbpx
Homeபிற செய்திகள்உலகத் தலைவர்களுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு!

உலகத் தலைவர்களுக்கு பாடம் புகட்டும் தீர்ப்பு!

சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. இது சிங்கப்பூர் அரசியல் வரலாற்றில் பதிவான மிக முக்கியமான சம்பவங்களில் ஒன்று. பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தத் தீர்ப்பு, உலகெங்கிலும் பேசும் பொருளானது.

நன்னடத்தையிலும் நேர்மையிலும் சிங்கப்பூர் கொண்டிருக்கும் உறுதியான நிலைப்பாட்டை உலகிற்கே வலியுறுத்தும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு அமைந்தது. உயர்ந்த தலைமைத்துவ பதவிகளில் இருப்பவர்களுக்கு நல்லொழுக்கமும் பொறுப்புணர்வும் முக்கியத் தகுதிகளாகும். தலைமைத்துவப் பொறுப்புகள் வகிக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்.

சமூகத்திற்கும் நாட்டிற்கும் தலைவர்களாக இருப்பவர்களுக்கு எப்போதுமே கூடுதலான பார்வையாளர்களும் இருப்பார்கள். எதையும் கவனத்துடன் கையாள வேண்டும். அவர்களின் செயல்பாடுகள் குறித்தத் தகவல்கள் எல்லாம் சமூக ஊடகங்களில் மின்னல் வேகத்தில் பரவக்கூடும். அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் புழங்கும் இக்காலத்தில் இதுபோன்ற போக்கைத் தவிர்ப்பது கடினம்.

எந்தக் காலகட்டத்திலும் சரி, தலைவர்களின் நடத்தை மக்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. தலைவர்கள் தவறாக நடந்துகொண்டால், அவர்களைப் பின்பற்றுபவர்களும் அத்தகைய போக்கு ஏற்புடைய ஒன்று எனத் தவறுதலாகப் புரிந்துகொண்டு அதன்வழி நடப்பது இயல்பு தானே.

சில சமயங்களில் சரி எது, தவறு எது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஒருவருக்குச் சரி எனத் தோன்றுவது மற்றொருவருக்குத் தவறாகப்படலாம். ஆனால், தலைவர்கள் அதற்கும் ஒரு படிமேல் சென்று, இருதரப்புக் கண்ணோட்டங்களையும் ஆராய்ந்து, பகுத்தறிவைப் பயன்படுத்தி நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும். தவறாகப் போய்விடக்கூடிய எதையும் தவிர்ப்பது நல்லது.

இளம் தலைமுறையினரை முறையாக வழிநடத்த சமூகத்தில் நல்ல பண்புநெறிகளை கடைப்பிடிக்கும் தலைவர்கள் தான் தேவை. நம் சமூகத்தின் எதிர்கால வளர்ச்சியைத் தீர்மானிக்கும் அம்சங்களில் தலைவர்களின் பொறுப்புணர்வும் நல்லொழுக்கமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்வர்.

ஏறத்தாழ 27 ஆண்டுகாலம் அரசியல் பணியாற்றிய எஸ்.ஈஸ்வரன் நாட்டிற்கு ஆற்றிய பங்கு ஏராளம். ஓர் அமைச்சராக, நாடாளுமன்ற உறுப்பினராக, மக்கள் செயல் கட்சி உறுப்பினராக அவர் சிறந்து விளங்கினார். குறிப்பாக, இந்தியச் சமூகத்திற்கும் தமிழ் மொழிக்கும் அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை.

அவரின் தற்போதைய நிலை மக்களை குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியது. ஆனாலும் இந்தச் சம்பவம் சிங்கப்பூர் மட்டுமின்றி உலக நாடுகளின் தலைவர்களுக்கெல்லாம் பாடம் புகட்டுவதாக அமைந்துள்ளது!

படிக்க வேண்டும்

spot_img