fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி: உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு

தர்மபுரி: உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா வழிகாட்டல் படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, மகளிர் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட பிரிவு மற்றும் மாவட்ட நுகர்வோர் அமைப்பு சார்பாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

கல்லூரி தமிழ் துறை தலைவர் மற்றும் நாட்டு நலப் பணிகள் திட்ட அலுவலர் செந்தில் குமார் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) மற்றும் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் ஜெயசீலன் மற்றும் பென்னாகரம் வட்ட நுகர்வோர் அமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் தலைவர் சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால், தலைமையில், காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகள் பங்கேற்புடன், துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைப்போடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல்வர் ஜெயசீலன் தன் உரையில் அயோடின் சத்து, உப்பு பற்றி கல்லூரி மாணவிகள் அவசியம் அறிந்து கொள்வதுடன் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறத்திலும் அயோடின் உப்பு குறித்து இந்நிகழ்வில் சொல்லப்படும் கருத்துக்களை உள்வாங்கி விழிப்புணர்வு செய்ய கேட்டுக் கொண்டார்.

காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமை உரையில் அயோடின் நூண்ணுட்ட சத்து குறைவினால் மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், மாலைக்கண் நோய், முன் கழுத்து கழலை, கர்ப்பிணி பெண்களுக்கு அடிக்கடி கரு சிதைவு, வளர்சிதை மாற்ற குறைபாடுகள் என 50க்கும் மேற்பட்ட பல்வேறு நோய்களுக்கு அயோடின் சத்து பற்றாக்குறை காரணமாகிறது. எனவே உப்பில் அயோடின் செறி ஊட்டப்பட்டு உபயோகப்படுத்த அரசு பெரும் முயற்சி ஏற்படுத்தி, விழிப்புணர்வும் செய்து வருகிறது.

ஆகவே நாம் அனைவரும் அயோடின் கலந்த உப்பினை உபயோகப்படுத்த வேண்டும் என உரைத்ததுடன் , அயோடின் உள்ள உப்பு , அயோடின் இல்லாத உப்பு வேறுபாட்டினை நேரடியாக உப்பு பாக்கெட்டைகளைக் கொண்டு MBI kit (ஸ்டார்ச் கரைசல்) உதவியுடன் செயல் விளக்கம் அளித்ததுடன், வீட்டு அளவிலேயே நாம் வாங்கும் உப்பில் அயோடின் உள்ளதா இல்லையா என்பதை உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை பழ சாறு கொண்டு கண்டறிதல் குறித்து விளக்கம் அளித்தார்.

மனிதனின் ஆயுட்காலத்தில் தேவைப்படும் அயோடின் அளவு வெறும் மூன்று கிராம் மட்டுமே அதற்கு ஏற்ற வகையில் உப்பில் அயோடின் செறிவூட்டப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் உடலில் உப்பின் மூலம் அயோடின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் சிறுநீர் வழியாக அதிகப்படியான அயோடின் வெளியேற்றப்படுகிறது என தெளிவுபடுத்தினார்

மேலும் உணவு பொருள் பாக்கெட்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும், உணவுப் பொருட்களை காண்பித்து செயல் விளக்கம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நுகர்வோர் அமைப்பு செயல்பாடு குறித்தும், நுகர்வோர் உரிமைகள் குறித்தும், நுகர்வோர் மன்றங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் சம்பத் கருத்துரை வழங்கினார்.

நிகழ்வில் நுகர்வோர் சங்க செயலாளர் பெரியசாமி, மாவட்ட மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜலக்ஷ்மி காரிமங்கலம் சிறப்பு வருவாய் ஆய்வாளர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதியாக உலக அயோடின் பற்றாக்குறை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img