fbpx
Homeபிற செய்திகள்இ- ஸ்போர்ட்ஸ் அறிமுகம் -அசத்தும் தமிழ்நாடு அரசு!

இ- ஸ்போர்ட்ஸ் அறிமுகம் -அசத்தும் தமிழ்நாடு அரசு!

சென்னையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஈ ஸ்போர்ட்ஸ் (e-sports) அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய கால குழந்தைகளுக்கு கைப்பேசி, தொலைக்காட்சி, கணினி தான் உலகம் என்ற அளவிற்கு அவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால், அவ்வாறு கணினியில் விளையாடுவதிலும் எதிர்காலம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம், உலக அளவில் இந்த நடைமுறை பெருமளவு அதிகரித்திருந்தாலும், இந்திய அளவில் தனியார்மயமாக மட்டுமே, இந்நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது.

சென்னையில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் முதல் முறையாக ஜாய் ஸ்டிக், கைப்பேசி, கணினி மூலம் விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுக்கென போட்டிகள் நடத்தப்பட்டது.

ஃபிபா கால்பந்து போட்டி, என்பிஏ கூடைப்பந்து, ஃபார்முலா ஒன் கார்ப்பந்தயம், ஸ்ட்ரீட் ஃபைட்டர், பிஜிஎம், பிரபல ஜப்பான் விளையாட்டான ஃபோக்மென், செஸ் உள்ளிட்ட எட்டு வகையான ஆன்லைன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், தகுதிச்சுற்று மூலம் 110 வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.
அண்மையில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப்போட்டியில் ஈ ஸ்போர்ட்ஸ் போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

மேலும், அடுத்த ஆண்டு துபாயில் ஈ ஸ்போர்ட்ஸ்க்கென உலகக் கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் ஒலிம்பிக் போட்டிகளிலும் ஈ ஸ்போர்ட்ஸ் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மூலம் இளைஞர்களுக்கு எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாக முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்கள் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர்.

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு போட்டிகள் முதலமைச்சர் கோப்பை மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

எதிர்காலத்தில் ஒலிம்பிக் ஈ ஸ்போர்ட்ஸில் இந்தியா தடம்பதிப்பதற்கான விதையை தமிழ்நாடு அரசு இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஏற்படுத்தியுள்ளது. டெக்னாலஜி உலகில் தமிழ்நாடு அரசு தடம்பதிக்கும் சாதனை நகர்வுகளில் இதுவும் ஒன்று என்றால் மிகையாகாது.

தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள்!

படிக்க வேண்டும்

spot_img