fbpx
Homeபிற செய்திகள்பாம்பன் பாலம் கட்டியதில் ஏன் இந்த அலட்சியம்?

பாம்பன் பாலம் கட்டியதில் ஏன் இந்த அலட்சியம்?

இந்துக்களின் புண்ணியத் தலமான ராமேஸ்வரத்தையும் மண்டபத்தையும் இணைக்கும் வகையில் கட்டி, 1913ல் திறக்கப்பட்டது தான் பாம்பன் பாலம். கடந்த 2022, டிசம்பர் 23ம் தேதி பாம்பன் பாலத்தை ரயில் கடந்தபோது, அதிர்வுகள் அதிகமாக இருந்தது. இதையடுத்து பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாம்பன் பழைய தூக்குப்பாலம் வழியாக ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து ரூ.550 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் ரயில் வெள்ளோட்டமும் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் கட்டுமானத்தில் பெரும் குறைபாடுகள் உள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சௌத்ரி ஆய்வுசெய்து அதன் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த அறிக்கையில், கட்டுமானத்தின்போது நடந்த விதிமுறை மீறல்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி கடுமையாக சாடியுள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தில் சில விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறியிருந்தார். அதாவது, புதிதாகப் பாலம் கட்டத் திட்டமிடும் முன்பாக ரயில்வே வாரியம் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும்.

ஆனால், பாம்பன் புதிய ரயில் பாலத்தில் இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை. பாலத்தில் அரிமானம், துருப்பிடித்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் இல்லை. தற்போதே அரிமானம் ஏற்படத் தொடங்கியுள்ளது என்றும் ஆணையர் கூறி இருப்பது அதிர்ச்சி தருவதாக உள்ளது.

பாம்பன் பாலம் கட்டுமானத்தில் அலட்சியம் காட்டியிருப்பது அந்த வழித்தடத்தில் நாள்தோறும் பயணம் செல்ல உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை அலட்சியப்படுத்தும் செயலாகும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அபாய சங்கை ஊதி தனது வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பாரம்பரியமிக்க பாம்பன் பாலத்தைக் கட்டுவதிலா அலட்சியம் காட்டுவது? அதுவும் தினமும் பல்லாயிரம் பேரின் உயிரைத் தாங்கும் முக்கியமான பாலத்தை கட்டுவதில் விதிமீறல் என்றால் அதில் என்னென்ன முறைகேடுகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

ஏனென்றால் விதிமீறல் நடந்திருப்பதை அம்பலப்படுத்தி இருப்பது ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சௌத்ரி அவர்கள். இதற்கிடையில் புதிய பாம்பன் பால சர்ச்சை குறித்து விசாரணை நடத்த ஐஐடி பேராசிரியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ரயில்வே மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேரைக் கொண்ட விசாரணைக்குழுவை அமைத்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பெருமைமிகு அமைப்பான இந்திய ரயில்வே வாரியம் தமிழகத்தின் பாரம்பரியமிக்க வழித்தடத்தில் பாம்பன் பாலத்தைப் பாதுகாப்பு விதிகளைப் புறக்கணித்துக் கட்டியிருப்பது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றி இருக்கிறது.

எனவே, புதிய பாம்பன் பாலம் வழியாக பயணிக்கப்போகும் பயணிகளின் உயிருக்கான பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்த பின்னரே ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பு- அதற்கான நடவடிக்கைகளை மத்திய ரயில்வே அமைச்சர் விரைவாக முன்னெடுத்து உரிய தீர்வு காண வேண்டும்!

படிக்க வேண்டும்

spot_img