அரசியல் சாசனத்தின் 348(1)(ஏ) பிரிவு, உச்சநீதிமன்றம் – உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. 348-வது சட்டப்பிரிவின் 2-வது பிரிவின் உட்பிரிவு (ஏ) பிரிவு (1)-ல், உயர் நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மாநில மொழிகளில் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில், அம்மாநில மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அந்தந்த மாநில மொழிகளிலேயே வழக்குகளை விசாரிக்கப்பட வேண்டும், தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் பல்லாண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலும் உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் அதற்கான அதிதீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல குஜராத், சத்தீஷ்கர், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் முறையே குஜராத்தி, இந்தி, வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளை உயர்நீதிமன்றம் கையாள வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
ஆனால், இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், மத்திய அரசு இப்போது பச்சைக்கொடி காட்டி உள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என்ற தித்திப்பான செய்தியை மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை பெற, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மொழிகள் குழுவை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே அமைத்திருந்தது. சட்டம் தொடர்பான அம்சங்களை மாநில மொழிகளில் மொழி பெயர்க்கும் நோக்கில் சொற்களஞ்சியத்தை இந்தக்குழு உருவாக்கி உள்ளது.
அதன்படி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தி பயன்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களில் மாநில மொழி பயன்பாடு வெற்றிகரமாக நடந்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, தற்போது, உயர் நீதிமன்றங்களில் மாநிலத்தின் அலுவல் மொழியைப் பயன்படுத்த ஆளுநர் அங்கீகரிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து இருப்பது மொழிவாரி மாநில மக்களுக்கு பெரும் பயன்தரும் என்பதில் ஐயமில்லை.
இதன்மூலம், தமிழகத்தின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறும் நிலை உருவாகி உள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விரையில் அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிக்கப்படும் என்பது உறுதியாகி விட்டது.
அறிவிப்பு வெளியாகும் பொன்னாள் வெகுதொலைவில் இல்லை!